சீமான் உடன் போக மாட்டேன்; விஜய் கூட கூட்டணி போனால் என்ன? தினகரன் சூசகம்
மதுரை: நாங்கள் சீமான் உடன் போக மாட்டேன். விஜய் கூட கூட்டணி போனால் என்ன? விஜய் என்ன தீண்டத்தகாதவரா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் பாஜக கூட்டணியில் இருந்தோம். லோக்சபா தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. இந்த தேர்தலில் அமமுக நிலைப்பாட்டை டிசம்பரில் எடுப்போம். விஜயகாந்த் 2006ல் தாக்கத்தை ஏற்படுத்திய போல், திரையுலகில் இருந்த விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது எல்லா கட்சிகளையும் பாதிக்கும். விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியதால் அவருடன் கூட்டணி என்பது தவறானது. பா.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல; நிதானமாக எடுத்த முடிவு. இந்த கட்சி யாரை எதிர்த்து தொடங்கியது என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். கூட்டணியை அண்ணாமலை இருக்கும் வரை சரியாக கையாண்டார். நயினார் நாகேந்திரன் எனக்கு நண்பர் தான். அவருக்கு கூட்டணியை சரியாக கையாள தெரியவில்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் பதில் சொன்ன போது நான் தொலைபேசியில் அவரிடம் பேசினேன். ஓபிஎஸ் உங்களுடம் போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று கேட்டேன். அதற்கு நயினார் சரியாக பதில் சொல்லவில்லை. நயினார் பேச்சு ஆணவம் மிக்கதாக இருந்தது. அதற்கு நானோ, பன்னீர் செல்வமோ கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை. பன்னீர் செல்வம் தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் நயினார் நாகேந்திரன் தான். ஓபிஎஸ் திமுகவிற்கு செல்லவில்லை. முதல்வர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க மட்டுமே ஓபிஎஸ் சென்றார். அரசியலை நான் வியாபாரமாக பார்க்கவில்லை. எங்களை ஒரு துக்கடா கட்சியாக பாஜ நினைத்தது. யாரை எதிர்த்து நாங்கள் கட்சி தொடங்கினோம் என பாஜவிற்கு தெரியும்.செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்போம். அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க அமித்ஷா முயற்சி எடுக்கிறார். அமித்ஷா முயற்சி கைகூடும் என்று காத்திருந்தோம். அது நடக்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி கை கூடாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அமமுகவை சிறிய கட்சி என பாஜ நினைத்து இருக்கலாம். அதிமுகவை ஒருங்கிணைக்கவில்லை என்றால் அக்கட்சி ஆட்சிக்கு வருவது கனவாகவே போகும். எங்களுக்கு என்ன இடர்பாடு என்பது டில்லியில் உள்ளவர்களுக்கு தெரியும். அதை சரி செய்தால் மீண்டும் தேஜ கூட்டணிக்கு செல்வது பற்றி முடிவு எடுப்போம். நாங்கள் சீமான் உடன் போக மாட்டேன். திமுக உடனும் போக மாட்டோம். புதிய கூட்டணி உருவாகும். அரசியலில் ஏதுவும் நடக்கும். நாங்கள் இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும். விஜய் கூட கூட்டணி போனால் என்ன? நான் எந்த கட்சி உடனும் போகலாம். யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். விஜய் என்ன தீண்டத்தகாதவரா? அரசியலுக்கு தகுதி கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.