மாணவி பாலியல் வன்முறை சம்பவம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது ஐகோர்ட்
சென்னை: அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் குறித்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானார். இந்த சம்பவத்தில், கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை, அப்பகுதி மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். குறைபாடு
'இந்தச் சம்பவம் குறித்த போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளன; சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. 'எனவே, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என, பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.அதில், 'இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்திருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில், மற்றொரு நபரையும் குறிப்பிட்டுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமர்வு, நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கியது. அப்போது, வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ''பெண் வழக்கறிஞர் கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்,'' என்று வலியுறுத்தினார்.மற்றொரு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ''முதல் தகவல் அறிக்கையை போலீசார் வெளியிட்டதன் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்துக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ''அண்ணா பல்கலை மட்டுமல்லாமல், அனைத்து கல்வி நிறுவன விடுதி மாணவியர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதால், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்று முறையீடு செய்தார்.இரு வழக்கறிஞர்கள் முறையீடு, பெண் வழக்கறிஞரின் கடிதத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், 'போலீஸ் புலன் விசாரணை குறித்து தீவிரமான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, பெண் வழக்கறிஞரின் கடிதத்தின் அடிப்படையில், இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது' என்று தெரிவித்தனர். உத்தரவு
இந்த வழக்கில், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலை துணை வேந்தர் மற்றும் பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும் உத்தரவிட்டனர்.இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகலில் விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தலைமை நீதிபதி அனுமதிக்காக பரிந்துரைப்பதாகவும், தலைமை நீதிபதி அனுமதிக்கு பின், இந்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து, போலீஸ் விசாரணை விபரங்களை, 'சீல்' இடப்பட்ட உறையில் தாக்கல் செய்வதாகவும், முதல் தகவல் அறிக்கையை காவல் துறை வெளியிடவில்லை,'' என்றும் கூறினார்.