பள்ளி ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., குறித்து இலவச கல்வி: சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம்
சென்னை:பள்ளி ஆசிரியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு திறன் குறித்த இலவச கல்வியை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் அறிமுகம் செய்கிறது. மத்திய அரசின் ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., ஆகியவை, நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி.,' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த சூழலில், அனைவருக்கும் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு கல்வியை, 'ஸ்வயம் பிளஸ்' திட்டத்தின் கீழ், சென்னை ஐ.ஐ.டி., சமீபத்தில் துவங்கியது. இயற்பியல், வேதியியல், கணக்கியல், கிரிக்கெட் பகுப்பாய்வு உட்பட ஆறு இலவச படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை, 45 நாட்கள் கொண்ட குறுகிய கால படிப்புகள். இதன் இரண்டாவது பிரிவு வகுப்புகள் நாளை துவங்குகின்றன. இந்நிலையில், ஆசிரியர்களுக்கும், ஏ.ஐ., சார்ந்த இலவச 'ஆன்லைன்' கல்வியை, 'ஸ்வயம் பிளஸ்' திட்டத்தின் கீழ், சென்னை ஐ.ஐ.டி., நாளை அறிமுகம் செய்கிறது. கற்பித்தல் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து, இந்த இலவச குறுகிய கால படிப்புகள், ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது. இந்த படிப்புகளுக்கு, மாணவர்களும், ஆசிரியர்களும், https://swayam-plus.swayam2.ac.inஎன்ற இணையதளத்தில், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.