மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
சென்னை:'ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும், 47 ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஆர்.கற்பகம் தாக்கல் செய்த மனு: சத்தியமங்கலம் வனப்பகுதியில், புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள, 1,411.6 சதுர கி.மீ., பரப்பு, 2013ல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இருந்தும், இங்கு வன நிலத்தை ஆக்கிரமித்தல், வேட்டையாடுதல், சட்டவிரோத ரிசார்ட்கள் கட்டுதல் போன்றவை அதிகரித்து வருகின்றன. ஒலி மாசு இவற்றால், காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவல்படி, புலிகள் சரணாலயத்தில், 47 ரிசார்ட்கள் சட்ட விரோதமாக செயல்படுகிறது. இவற்றை மூட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல, 'சரணாலய பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் திருவிழாவுக்கு வருவோரின் வாகனங்களால் ஏற்படும், ஒலி மாசை கட்டுப்படுத்த, வாகன கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என, மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய, முதல் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜராகி, ''ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவுக்கு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகின்றனர். அவர்கள் வரும் வாகனங்களால் ஒலி மாசு ஏற்படுகிறது. ''விழாவில் பலியிடப்படும் ஆடுகளின் கழிவுகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் விடுகின்றனர். வனப்பகுதிக்குள் ஆடுகளை பலியிட அனுமதிக்கக்கூடாது. வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், கோவில் வளாகத்தில், பக்தர்கள் இரவு நேரத்தில் தங்க அனுமதிக்க கூடாது,'' என்றார். பேட்டரி வாகனங்கள் அரசு தரப்பில், பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''கடந்த ஆண்டு 5,000 பக்தர்கள் தான் வந்தனர். பக்தர்களுக்கு தங்கும் இடம், கழிவறை, குடிநீர் வசதிகள் செய்யப்படுகின்றன. சட்டவிரோத ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், 'கோவில் திருவிழாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை, முழுமையாக அமல்படுத்த வேண்டும். 'திருவிழா நேரத்தில், 'பேட்டரி' வாகனங்களை பயன்படுத்துவது குறித்து, தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். புலிகள் சரணாலய பகுதியில், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக, நான்கு வாரங்களில் அரசு அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
30-Sep-2025