சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் அனுமதி கேட்கும் மனு அதிகரிப்பு
கோவை:சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு, சிறுநீரகம் தானம் கொடுப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், அறுவை சிகிச்சைக்கான அனுமதி பெற, கோவை கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனுக்கள் குவிகின்றன.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தமிழகத்தில் அரசு அனுமதி பெறுவது அவசியம். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, நன்கொடையாளர் நெருங்கிய உறவினராக இருப்பது அவசியம். உறவு முறைக்கு தொடர்பில்லாத சிறுநீரக நன்கொடையாளரிடமிருந்து சிறுநீரகம் பெற, அரசால் நிறுவப்பட்ட, அங்கீகார குழுவின் அனுமதி தேவை. இதற்காக, கோவை தெற்கு மற்றும் வடக்கு கோட்டாட்சியர் அலுவலகங்களில், மாதந்தோறும் 30 முதல், 50 மனுக்கள் வருகின்றன. முன்னர், 10 முதல், 12 மனுக்களே வந்தன.கோவை வடக்கு வருவாய் கோட்டத்தில், கடந்த மாதம், 60 மனுக்களும், கோவை தெற்கு கோட்டத்தில், 40 மனுக்களும் அனுமதி கோரி வந்துள்ளன.கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் கூறுகையில், ''சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வரும் மனுக்கள் மீது, உடனடி விசாரணை மேற்கொண்டு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி கோரி வரும் மனுக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,'' என்றார்.