உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதியை நிலை நாட்ட வக்கீல்களுக்கு அறிவார்ந்த வாதத்திறமை அவசியம் * நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு

நீதியை நிலை நாட்ட வக்கீல்களுக்கு அறிவார்ந்த வாதத்திறமை அவசியம் * நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு

சென்னை:''நீதியை நிலை நாட்ட, இளம் வழக்கறிஞர்கள் தங்களின் அறிவார்ந்த வாதத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசினார்.சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அம்பேத்கரின், 134வது பிறந்த நாள், அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 75வது ஆண்டு நிறைவு, சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிறுவப்பட்ட, 110வது ஆண்டு என, முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதில், துணை முதல்வர் உதயநிதி, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார், டி.பரதசக்கரவர்த்தி மற்றும் சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசியதாவது:அம்பேத்கர் தன் வீட்டில் மிகப்பெரிய நுாலகம் வைத்து இருந்தார். அதில், 65 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. எல்லா புத்தகங்களையும் வாசித்தார். உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார். அவரின் உழைப்பு அபாரமானது. அவர் காட்டிய வழியில் அறிவையும், திறமையும் வளர்த்துக் கொள்வதே, அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. சென்னை எழும்பூர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்த அஞ்சுகின்றனர். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது.நீதியை நிலைநாட்ட இளம் வழக்கறிஞர்கள், சட்டத்தின் வாயிலாக போராட வேண்டும். அதற்கு தங்களின் அறிவார்ந்த வாதத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீதி ஒன்றே குறிக்கோள் என்ற இலக்குடன் செயல்பட்டு, தங்களை நாடி வருவோரின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை