| ADDED : மார் 16, 2024 07:51 AM
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தில் விதிமீறல் கல்குவாரி செயல்பட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.முள்ளங்கினாவிளை பால்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: விளவங்கோடு அருகே நட்டாலம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்திலுள்ள சில சர்வே எண்களில் கல்குவாரி நடத்த சிலருக்கு தமிழக அரசு உரிமம் வழங்கியது. சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் கற்களை வெட்டி எடுக்கின்றனர். அருகிலுள்ள வீடுகள் அதிர்கின்றன. துாசி படலத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. நீர்நிலைகள் மாசடைகின்றன.விதிகளை மீறி அதிக ஆழத்தில் கற்களை வெட்டி எடுக்கின்றனர். அருகிலுள்ள நிலத்திலும் குவாரி நடத்தப்படுகிறது. இதற்கு உரிமம் பெறவில்லை. தமிழக கனிமவளத்துறை கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், 'ட்ரோன்' (ஆளில்லா விமானம்) மூலம் மதுரை மண்டல கனிமவளத்துறை இணை இயக்குனர், கன்னியாகுமரி கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு,'அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை,' என தெரிவித்தது.நீதிபதிகள்: குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.