உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வண்டல் வடிகால் தொட்டிக்குள் பெண் பிணம்; மர்ம கும்பல் கொலை செய்ததா என விசாரணை

வண்டல் வடிகால் தொட்டிக்குள் பெண் பிணம்; மர்ம கும்பல் கொலை செய்ததா என விசாரணை

சென்னை: மழைநீர் வடிகால் வாயின் வண்டல் வடிதொட்டிக்குள், பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் கொலை செய்து, தொட்டியில் தலைகீழாக பெண்ணின் உடலை மறைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்ணாநகர், வீரபாண்டி நகர் முதல் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் இணைப்பாக உள்ள வண்டல் வடிதொட்டிக்குள், பெண் ஒருவர் நேற்று காலை, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கைகள் கட்டபட்டு இருந்தன. சிறு தொட்டிக்குள் பெண் மர்மமாக இறந்து கிடப்பது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சூளைமேடு போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரிந்தது இறந்தவர், கோடம்பாக்கம் வரதராஜப்பேட்டை வாத்தியார் தெருவைச் சேர்ந்த தீபா, 41, என்பது தெரிய வந்துள்ளது. இவரது கணவர் ஜெகன். இவர்களுக்கு 20 வயது மகள் உள்ளார். வீட்டு வேலை தொழிலாளியான தீபா, சமீபகாலமாக தாய் வீட்டில் வசித்து வந்ததும், வேலை செய்த வீடுகளில் தங்கிவிட்டு, எப்போதாவது வீட்டிற்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. இறந்த தீபாவின் நெற்றியிலும், உதட்டிலும் காயம் உள்ளது. சிறிய அளவிலான வண்டல் வடி தொட்டிக்குள் யாரும் தவறி விழ வாய்ப்பில்லை. தலைகுப்புற விழுந்தாலும் தொட்டிக்குள் தலை செல்லும் வகையில் துல்லியமாக விழ முடியாது. இதனால், பெண்ணை யாரோ கொலை செய்து வண்டல் வடிதொட்டிக்குள் நுழைந்திருக்கலாம் அல்லது பெண்ணின் தலையை தொட்டிக்குள் நுழைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாய்ப்பில்லை என்கிறது மாநகராட்சி

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் ஒவ்வொரு இடங்களிலும் மழைநீர் வடிகால்வாயை ஒட்டியவாறு வண்டல் மண் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படியே, சூளைமேட்டில் பெண் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் இடத்தில், வண்டல் மண் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வண்டல் மண் தொட்டி, 2 அடி ஆழம், 2 அடி அகலம் மட்டுமே கொண்டது. இந்த தொட்டியில் தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அதன் ஆழம் குறைவு. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
செப் 03, 2025 12:19

இனி வாழ போகும் பெண்ணே தனித்து எங்கோயோ வாழ்வது எவ்வளவு பெரிய ஆபத்து. சொந்தங்களோடு உறவோடு வாழ் இல்லை பணம் சுகம் கொஞ்ச நேரம் தான். ஒழுக்கமே மேன்மை தரும்.


முக்கிய வீடியோ