UPDATED : பிப் 17, 2024 07:29 AM | ADDED : பிப் 16, 2024 11:30 PM
சென்னை:'பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல நடித்து, ஆன்லைன் வாயிலாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்; பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், 'பிளாக்ராக் கேப்பிடல்' போன்ற பன்னாட்டு முதலீடு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல, சமூக வலைதளங்களில் தொடர்பு எண்களுடன் விளம்பரம் செய்கின்றனர். நம் நாட்டில் செயல்படும் 'ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டி' எனப்படும், பங்கு வர்த்தக முதலீடு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளம்பரம் செய்கின்றனர்.பங்கு வர்த்தக முதலீடு, ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக ஆலோசனை பெற, 'வாட்ஸாப், டெலிகிராம்' உள்ளிட்ட சமூக வலைதள குழுக்களில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். அதன்படி செயல்பட்டால், அந்த குழுவில் ஏற்கனவே இருப்பவர்கள், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த அனுபவங்களை பகிர்கின்றனர்.இவர்கள் பங்கு வர்த்தக முதலீட்டாளர்கள் அல்ல; அந்த குழுக்களில் இடம் பெற்று இருப்பவர்கள் சைபர் கிரைம் குற்றவாளிகளே.இவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் உண்மை போல இருப்பதால், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் நம்பி விடுகின்றனர். முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்த, பங்கு வர்த்தக முறையில், ஒருவர் வாங்கும் பங்குகளை கணக்கில் கொள்ள, மின்னணு முறையிலான 'டீமாட் அக்கவுன்ட்' என்ற கணக்கு துவங்கவும் ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு கட்டத்தில் பல முன்னணி நிறுவனங்களின் பெயர்களை சொல்லி, இப்போது முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். அதற்கு முதலீடு செய்ய, நாங்கள் தெரிவிக்கும் வங்கிகளுக்கு பணத்தை அனுப்புங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், இந்த தொகையில் பங்குகளை வாங்காமல் மோசடி செய்து விடுகின்றனர்.தமிழகத்தில் தற்போது இத்தகைய மோசடி நடந்து வருகிறது. இது தொடர்பாக புகார்களும் வந்துள்ளன. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.உணர்ச்சி வேகம் மற்றும் பிறரின் அழுத்தம் காரணமாக, ஒரு போதும் முதலீடு செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகள் பொய்களை அள்ளி வீசி, நம்ப வைத்து பணத்தை மோசடி செய்கின்றனர்.சைபர் கிரைம் மோசடிகள் குறித்து, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.cybercrime.gov.inஎனும் இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.