ஐ.ஆர்.சி.டி.சி., சர்வர் அடிக்கடி கோளாறு தத்கல் முன்பதிவில் தவிக்கும் பயணியர்
சென்னை:ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 'தட்கல்' முன்பதிவின் போது, அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இதனால், டிக்கெட் எடுக்க முடியாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தான், 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பஸ் டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, 'வீல் சேர்' முன்பதிவு உட்பட பல்வேறு கூடுதல் வசதியுடன், இந்த இணையதளம் இருக்கிறது.இதற்கிடையே, கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், ரயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சில நாட்களாக, 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு துவங்கும் போது, அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது. இதனால், அவசரத்திற்கு டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். டிக்கெட் முன்பதிவின் போது, 3 முதல் 5 டிக்கெட்டுகள் இருப்பதாக காட்டுகிறது. முன்பதிவு செய்ய துவங்கினால், 'சர்வர்' பிரச்னை என, அறிவிப்பு வருகிறது. சில நிமிடங்களுக்கு பின், முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் நிலைக்கு வந்து விடுகிறது. ஆனால், பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயலும் போது, சில நேரங்களில், 'சர்வர்' பிரச்னை ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். இணையதளத்தின் சர்வர் திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.