கவுன்சிலர் காலில் விழ வைப்பது தான் சமூக நீதியா? அரசு ஊழியர் சங்கம் காட்டம்
திருப்பூர்:''நகராட்சி ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைப்பது தான், திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதியா?,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுசெயலர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், மாநில செயற்குழு முடிவுப்படி, நவ., 8ம் தேதி, 16வது மாநில பிரதிநிதித்துவ பேரவை திருப்பூரில் நடக்கிறது. இதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம், திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பொறுப்பு - பாண்டியம்மாள் தலைமை வகித்தார். துணை தலைவர் மதன்குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுசெயலர் சீனிவாசன், அளித்த பேட்டி: கடந்த, 2021 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியில், 309 முதல், 319 வரையிலான கோரிக்கை மீது உத்தரவாதம் அளித்திருந்தனர். அதை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதிநிதித்துவ பேரவை நடத்துகிறோம். நான்கரை ஆண்டுகளுக்கு பின், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய குழுவை அமைத்து, கருத்துக்கேட்பு நடத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரவாதம் அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசுத்துறை வாரியாக, அதிகாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. வேளாண் துறை இயக்குநர், அதிகாரிகளை தகாத வார்ததைகளால் பேசி புண்படுத்தியுள்ளார். இதேபோல், பட்டுவளர்ச்சித் துறை, தொழிலாளர் துறை போன்ற சில துறைகளில் அச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்கிறது. திண்டிவனம் நகராட்சியில், ஊழியர் ஒருவரை, கவுன்சிலர் காலில் விழ வைத்துள்ளனர்; இதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதியா? தமிழக அரசின் அறிவிப்பும், செயல்பாடும், அதிகாரிகளின் அணுகுமுறையும், முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாநில பிரதிநிதித்துவ பேரவை அமையும். அதற்காக, முன்னாள் ஆட்சியாளர்கள், எங்கள் போராட்டத்தை தன்வசப்படுத்த இடம் கொடுக்க மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை, எவ்வித சமரச போக்கும் இருக்காது. பேரவைக்கு முன்னதாக, நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.