வாய்ஸ் ரிக்கார்டர் செயல்படுகிறதா? ஆய்வு செய்கிறது ரயில்வே வாரியம்
சென்னை:ரயில் நிலைய அலுவலர்கள், 'கேட் கீப்பர்'களின் உரையாடலை பதிவு செய்யும், 'வாய்ஸ் ரிக்கார்டர்' சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்ய, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தில், கடந்த 8ம் தேதி காலை பள்ளி வாகனம் மீது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில் மோதியதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து, ரயில்வே கேட் கீப்பர், ரயில் ஓட்டுநர், நிலைய மேலாளர் உட்பட, 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில் செல்லும்போது, 170 எண் கொண்ட, 'லெவல் கிராசிங் கேட்' மூடப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. அதனால், ரயில் வருகை பற்றிய தகவல், கேட் கீப்பருக்கு சொல்லப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், ரயில் வருகை பற்றி, கேட் கீப்பரிடம் நிலைய மேலாளர் தெரிவிக்கும் தகவலும், கேட் மூடப்பட்டதாக, கேட் கீப்பர் கூறிய பதிலும், 'வாய்ஸ் ரிக்கார்டர்' என்ற சாதனத்தில் பதிவாகும். இந்த கருவிகள், ரயில் நிலைய மேலாளர் அறைகளில் இருக்கும். இந்த வாய்ஸ் ரிக்கார்டர் கருவிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய, அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் தற்போது உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: உரையாடல் தரம் சீராக உள்ளதா; பதிவுகளை மீட்டெடுப்பதில் சிக்கல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தினமும் குறைந்தது இரண்டு முறையாவது, இந்த வாய்ஸ் ரிக்கார்டர்களை பரிசோதனை செய்ய வேண்டும். இதில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.