உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியம் வழங்குவதால் அரசுக்கு செலவு உயராது ஜாக்டோ - ஜியோ முறையீடு

ஓய்வூதியம் வழங்குவதால் அரசுக்கு செலவு உயராது ஜாக்டோ - ஜியோ முறையீடு

சென்னை:'ஓய்வூதியம் வழங்குவதால் மட்டுமே, தமிழக அரசுக்கு வருவாய் செலவினம் உயரவில்லை' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூறியுள்ளது. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து, அரசு அலுவலர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்பதற்கு, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. நான்கு கட்டங்களாக பல்வேறு சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்ட கருத்துகேட்பு கூட்டம், 18ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட கருத்துகேட்பு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 17 சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தலா இரண்டு பிரதிநிதிகள் வீதம் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. 'ஜாக்டோ - ஜியோ' சங்கம் கொடுத்துள்ள மனு: தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், மீண்டும் ஓய்வூதிய குழுவை, நிதித் துறை அமைத்தது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, செப்டம்பர் 30ம் தேதிக்குள், ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு தன் அறிக்கையை, அரசிடம் வழங்க வேண்டும். ஓய்வூதிய செலவினம் அதிகரித்துள்ளது என, தமிழக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு ஆண்டும் வருவாய் செலவினம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப, வருவாய் வரவினமும் அதிகரித்துள்ளது என்பதை, 25 ஆண்டு கால புள்ளிவிபரங்கள் எடுத்து காட்டுகின்றன. ஓய்வூதியம் வழங்குவதால் மட்டுமே, வருவாய் செலவினம் உயரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஆக 24, 2025 07:39

கடமையை நேர்மையாக செய்யாமல் லஞ்சத்தின் பேரில் பல குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கெல்லாம் ஓய்வூதியம் ஏன் வழங்க வேண்டும் என்பதை உணருவது எக்காலமோ அது தான் நாட்டின் பொற்காலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை