ஜாபர்சாதிக் ஜாமின் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்
சென்னை:அமலாக்கத்துறை வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனுவை, வேறு நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தினார்.போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சினிமா தயாரிப்பாளரும், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். பின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழும், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, ஜாபர் சாதிக்கை கைது செய்தது. அவரது சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார். இவர்களின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுக்களை, வேறு நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.இதற்கிடையில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''இருவரது ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து, கடந்த 19ல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு முன்பே, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.