மேலும் செய்திகள்
கல்லுாரி செய்திகள்
04-Oct-2024
சென்னை:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும், 'லோக் ரங்' கலை திருவிழாவில், தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சியை பார்த்து, பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஜவஹர் கலா கேந்திரா சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கலை திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது; வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாசார பெருமைகளை, மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இந்த திருவிழா, அரசின் சார்பில் 27வது ஆண்டாக நடத்தப்படுகிறது.இதில், கைவினைப் பொருட்கள் விற்பனை நடப்பதுடன், மாலை நான்கு மணி நேரம், 4,000 கலைஞர்கள் பங்கேற்கும், 'லோக் ரங்' என்ற நாட்டுப்புற கலை விழா நடக்கிறது. இதில், அனைத்து மாநிலங்களும், கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுஉள்ளது.தமிழகத்திற்கு 21, 22, 23ம் தேதிகளில், கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, திருச்சி மாவட்டம், துறையூர் சிவசக்தி கலைக்குழுவை சேர்ந்த 16 பேர்; கரூர் ராகவா கலைக்குழுவை சேர்ந்த 15 பேர் என, 31 கலைஞர்களை, தமிழக கலை பண்பாட்டு துறை அனுப்பி வைத்தது. இவர்கள் கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், காளியாட்டம், சிவன் ஆட்டம், கருப்பசாமி ஆட்டம், துடுப்பாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.பொதுவாக, தென்மாநில கலைகளில், தமிழக கலைகள் வித்தியாசமானவை. இவற்றில் உள்ள நாதஸ்வரம், தவில், தப்பு, உறுமி உள்ளிட்ட இசைக் கருவிகள் எழுப்பும் இசை, உற்சாகத்தை வரவழைக்கும். அந்த வகையில், தமிழக இசையுடன், நாட்டுப்புற நடனத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள், உற்சாக குரலெழுப்பி ஆர்ப்பரிக்கின்றனர்.
04-Oct-2024