பழனிசாமிக்கு எதிரான கருத்து நீக்கியதாக பத்திரிகையாளர் மனு
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை நீக்கி, டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, வீடியோ வெளியிட்ட டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக, 2019ல், பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்; 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியிருந்தார்.கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவில் பழனிசாமிக்கு எதிராகக் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை நீக்குவது தொடர்பாக, மனு தாக்கல் செய்ய, மேத்யூ சாமுவேல் தரப்புக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேத்யூ சாமுவேல் தரப்பில், பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை நீக்கியுள்ளதாக கூறி, மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, பதில் மனுவில் வேறு ஏதேனும் கருத்துகளை நீக்க வேண்டுமா என்பது தொடர்பாக, பழனிசாமி தரப்பு தெரிவிக்க உத்தரவிட்டார். விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.