உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 44 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - ரஜினி

44 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - ரஜினி

சென்னை: நடிகர் ரஜினியின் 173வது திரைப்படத்தை, நடிகர் கமலின், 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. திரையுலகில் 44 ஆண்டுகளுக்கு பின், இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். நடிகர் ரஜினி, தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அவரது 173வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை கமலுக்கு சொந்தமான, 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை, கமல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பின், தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்கள் இணைவது, ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும். ரஜினி, கமல் கோலோச்சிய காலகட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக, இப்படம் அமையும். இது தொடர்பாக, ரஜினிக்கு கமல் எழுதிய கடிதத்தில், 'காற்றாய் அலைந்த நம்மை இறக்கி, இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப்பாறைகள். உருகி வழிந்து, இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய், மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம். மகிழ்வோம். வாழ்க நாம் பிறந்த கலை மண்' என தெரிவித்துள்ளார். கடந்த, 1981ம் ஆண்டு வெளியான, ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில், கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இருவரும், 44 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !