உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரியலுார், நீலகிரிக்கு ராம்சார் அங்கீகாரம்

அரியலுார், நீலகிரிக்கு ராம்சார் அங்கீகாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரியலுார் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், நீலகிரி மாவட்டம் லாங்வுட் சோலை காடுகள் ஆகிய இடங்கள் சர்வதேச 'ராம்சார்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக, 1971ல் ஈரான் நாட்டில் ராம்சார் நகரில், சர்வதேச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள், அலையாத்தி காடுகள் சர்வதேச அளவில் பட்டியலிடப்படுகின்றன.ராம்சார் பட்டியலில் இடம் பெறும் இடங்கள் சர்வதேச அளவில் கவனத்தை பெறுகின்றன. ஆண்டு தோறும் பிப்., 2 சர்வதேச ஈர நிலங்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை, 14 இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் இந்த ஆண்டுக்கான கணக்கில் கூடுதலாக, இரண்டு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அரியலுார் மாவட்டத்தில், 1,121 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலமாக உள்ள இப்பகுதி கிராம மக்களால் பாதுகாக்கப்படும் நிலையில் இங்கு, 198 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. நீலகிரி மாவட்டத்தில், 286 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லாங்வுட் சோலை காடுகள், ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வெப்ப மண்டல மழைக்காடாக வகைபடுத்தப்பட்டுள்ள இப்பகுதிக்கு, 14 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.இவற்றுடன் சேர்த்து தமிழகத்தில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, 16ஆக அதிகரித்துள்ளது. இதனால், ராம்சார் பட்டியலில் இடம் பெற்ற பகுதிகள் அதிகம் உள்ள முதல் மாநிலம் எந்த பெருமையை தமிழகம் பெற்றுஉள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Muthuraj Richard
பிப் 01, 2024 11:51

முதலில் கட்டிட அனுமதியை முறைப்படுத்துங்கள், மூச்சு முட்டும் அளவுக்கு சுற்றுப்புற சூழலை கண்டுகொள்ளாமல் கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன, சுற்றுலா வருபவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் குப்பைகளை வீசிச்செல்கிறார்கள், வாகனங்கள் அதிகரித்துள்ளன, வெளிநாட்டு மரங்களும் செடிகளும் அதிகமாக பரவியுள்ளன, சோலைக்காடுகள் யுகாலிப்டஸ் மற்றும் சவுக்கு மரங்களால் நிறைந்துள்ளன, இவையெல்லாம் முறைப்படுத்தப் படாவிடில் அழிவின் விளிம்பில் உள்ள நீலகிரியை காப்பாற்றவே மெடியாது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ