மதுரை : பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு, தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக புறப்பட்ட, நடிகை குஷ்பு உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து, ஆட்டு கொட்டகையில் அடைத்தனர்.அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியதுடன், அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றன.அந்த வகையில், தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், மதுரையில் இருந்து சென்னைக்கு, நீதி கேட்டு பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பேரணி முடிவில், கவர்னரிடம் மனு அளிக்கப்படும் என்றும், அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்டபடி பேரணி துவங்கும் என, பா.ஜ., அறிவித்தது. நேற்று காலை, பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு, மாநில பா.ஜ., மகளிர் அணி தலைவி உமாரதி மற்றும் நிர்வாகிகள், மதுரை, சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் அருகே திரண்டனர். பேரணி செல்ல முயன்ற, குஷ்பு உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். போலீசார் கைது செய்வதற்கு முன், குஷ்பு பேசியதாவது:இங்கு வந்துள்ள கூட்டம், தி.மு.க.,வினர் பிரியாணி கொடுத்து அழைத்து வருவது போன்றது கிடையாது. நீதிக்காக போராடும் கூட்டம். பெண் குழந்தை வைத்துள்ள அனைவரும், அண்ணா பல்கலை மாணவிக்கு பிரச்னை ஏற்பட்டதால், தெருவுக்கு வந்து போராடுகின்றனர். இது பா.ஜ., பிரச்னை மட்டும் கிடையாது. தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பிரச்னை.தி.மு.க.,வினர் விளம்பரம் தேடுவதாக கூறுகின்றனர். விளம்பரம் தேவைப்படுவது அவர்களுக்கு தான். கையில் காகிதம் வைத்து படிக்கும் முதல்வருக்கு, பெண்களை காப்பாற்ற வக்கில்லை. பெண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என கற்றுக் கொள்ளுங்கள். பெண்களுக்கு சுயமரியாதை சொல்லிக் கொடுத்தவர் கருணாநிதி. அவர் குடும்பத்தில் இருந்து வந்தவரா நீங்கள்; நான்கு ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள்?ஊழலுக்கு பெயர் போன கட்சி தி.மு.க., நீங்கள் மற்றவர்களை பார்த்து ஊழல் என, பேசக்கூடாது. ஒரு பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தால், முதல்வரான நீங்கள் பார்த்தும், பார்க்காததும் மாதிரி போகிறீர்கள்.யார் அந்த சார்?
இப்பிரச்னை வந்தபோது போலீசார், 'ஒரு சார் சொன்னாரு. அதனால் தான் அந்த ஞானசேகரனை விட்டு வைக்க வேண்டியதாக இருந்தது' என்றனர். யார் அந்த சார்... இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?இன்று பள்ளிக்கூடம் வாசலிலேயே போதைப் பொருட்களை விற்கின்றனர். தமிழகத்தில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வரை, நீங்கள் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கும் வரை, நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். அது கிடைக்கும் வரை போராடுவோம். இது இந்த மண் மீது சத்தியம்; கண்ணகி மேல சத்தியம்.தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிக்கு சமம். முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, இது வெறும் ஆரம்பமே; மேலும் தொடரும். நீங்கள் போலீசை வைத்து கைது செய்தாலும், தெருவுக்கு வருவோம். 'நாரி சக்தி' என பிரதமர் கூறுவார். அந்த நாரி சக்தி என்னவென்று காண்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.மாநில மகளிர் பிரிவு தலைவி உமாரதி பேசியதாவது:
நேற்று முன்தினம் இரவு முதல், மகளிர் அணியினரை வீடு வீடாக கைது செய்கின்றனர். இதற்காக போலீசாருக்கு நன்றி. பா.ஜ.,வை பார்த்து அரசு பயந்து போய் இருக்கிறது. இது கண்ணகி நீதி கேட்ட இடம். எங்களை அடக்கினீர்கள் என்றால், பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவோம். நாங்கள் பேரணி சென்றால், 2026ல் ஆட்சி மாற்றம் வந்து விடும் என்று பயமா?பெண்களுக்காக தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட ஒரு தலைவர், முதல்வராக வந்து விடுவார் என்று பயம் உள்ளதா?தமிழகத்தில் பிரச்னை என்றால் மணிப்பூரை பார்; பா.ஜ.. ஆளும் மாநிலங்களை பார் என்கிறீர்கள். முதலில் உங்கள் வீட்டுப் பிரச்னையை தீர்த்து விட்டு மற்ற இடங்களை பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கொட்டகையில் அடைப்பு
குஷ்புவை போலீஸ் வேனில் ஏற்றி அருகில் இருந்த ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏலம் விடுவதற்காக, தினமும் ஏராளமான ஆடுகளை அடைத்து வைப்பர். ஆட்டு கழிவுகளால் துர்நாற்றம் வந்தது. எனவே, கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் கைதானவர்களை மாலை வரை, அங்கேயே போலீசார் வைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, 50 ஆண் தொண்டர்களை, வடக்கு மாசிவீதி தருமபுரம் ஆதீன மடத்தில் அடைத்து வைத்தனர்.
கண்ணகி கோவில் அருகே...
* மதுரையில் முதலில் தெப்பக்குளத்தில் பேரணியை துவக்க அனுமதி கேட்டனர். பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலை யோசனைப்படி, கண்ணகி நீதி கேட்ட மதுரையில், அவருக்கான கோவில் உள்ள, சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் அருகே துவக்கினர்* குஷ்பு வரும் முன்பாக, மகளிர் அணியினர் தீச்சட்டி எடுத்தனர். மதுரையில் கோபக்கனலை வீசிய கண்ணகி சிலைக்கு, மிளகாய் வற்றல் அரைத்து பூச வேண்டும் எனக் கூறி, கோவில் வாசலில் அம்மியில் அரைத்தும், உரலில் இடித்தும் வைத்திருந்தனர். அந்த வழக்கம் இல்லை என்பதால், அதை பூசவில்லை* மேடையாக உருவாக்கப்பட்டிருந்த, மினி லாரியில் ஏறிய குஷ்பு, கையில் சிலம்பு ஏந்தி காட்சி கொடுத்தார். பேசி முடித்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்க வாகனத்தில் இருந்து இறங்கினார். அருகில் உள்ள கட்டடத்திற்கு சென்றபோது, அவரை சுற்றி கூட்டம் மொய்த்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கால் இடறி சரிந்தவரை, பெண் போலீசார், மகளிரணியினர் தாங்கி பிடித்தனர்.
பேரணியில் பங்கேற்ற ரஷ்ய பெண்
மதுரையில் பா.ஜ., மகளிரணி சார்பில் நடந்த நீதிபேரணி துவக்க நிகழ்ச்சியில் ரஷ்யாவில் இருந்து சுற்றுப்பயணமாக வந்த கத்ரீனா என்ற பெண்ணும் பங்கேற்றார். மகளிரணியினருடன் நின்றிருந்தார். மகளிரணியினிர் செல்லத்தம்மன் கோயில் முன்பு இருந்த உரலில் மிளகாய் வத்தலை அம்மனுக்கு(கண்ணகிக்கு) பூசுவதற்காக அரைத்தனர். அதில் கத்ரீனாவும் பங்கேற்றார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தாயாக இருப்பது பெண்கள்தான். எங்குமே பெண்களுக்கு எதிராக குற்றம் நடக்கக்கூடாது. அதனால் இந்த நீதிபேரணியில் கலந்து கொண்டு என்னுடைய ஆதரவை தெரிவித்தேன்,'' என்றார்.
கடைசி வரை டென்ஷனில் குஷ்பு!
நீதிபேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார், குஷ்புவை கைது செய்து, கட்சியினருடன் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். தன்னுடைய மகள் இரவு 9:30 மணிக்கு லண்டன் செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்த நிலையில், மாலை 3:30 மணிக்கே, மதுரையில் இருந்து சென்னை செல்ல விமான டிக்கெட் எடுத்திருந்தார் குஷ்பு. அதனால், முன் கூட்டியே தன்னை விடுவிக்குமாறு போலீசாரை தொடர்ந்து வலியுறுத்தினார். போலீசார் மறுக்கவும், டிக்கெட்டை 5:30 மணிக்கு மாற்றினார். பின், 7:00 மணிக்கு மாற்றினார். குஷ்பு உள்ளிட்ட கைது செய்யப்பட்ட பா.ஜ.,வினரை போலீசார், மாலை 6:00 மணிக்கு விடுவித்ததும், அவசர அவசரமாக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. இதற்கிடையில், திட்டமிட்டபடி லண்டனுக்கு செல்ல முடியாமல் தவித்த குஷ்பு மகள், இரவு 9:30 மணிக்கு புறப்படுவதை, அதிகாலை 3:30 மணிக்கு தள்ளி வைத்தார். அரசின் கொடூர மனநிலை!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான, அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு, பா.ஜ., மகளிரணி சார்பில், மதுரையில் இருந்து சென்னை வரை, பேரணி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, மதுரையில் நீதிக்காக அணி திரண்ட பா.ஜ., மகளிரணியினரை, போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அங்கு நுாற்றுக்கணக்கான ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தி.மு.க., அரசின் கொடூர மனநிலையைக் காட்டுகிறது.கண்ணகி கோவில் அருகே...
*மதுரையில் முதலில் தெப்பக்குளத்தில் பேரணியை துவக்க அனுமதி கேட்டனர். பின்னர் மாநிலத் தலைவர் அண்ணாமலை யோசனைப்படி, கண்ணகி நீதி கேட்ட மதுரையில், அவருக்கான கோவில் உள்ள, சிம்மக்கல் செல்லாத்தம்மன் கோவில் அருகே துவக்கினர்* குஷ்பு வரும் முன்பாக, மகளிர் அணியினர் தீச்சட்டி எடுத்தனர். மதுரையில் கோபக்கனலை வீசிய கண்ணகி சிலைக்கு, மிளகாய் வற்றல் அரைத்து பூச வேண்டும் எனக் கூறி, கோவில் வாசலில் அம்மியில் அரைத்தும், உரலில் இடித்தும் வைத்திருந்தனர். அந்த வழக்கம் இல்லை என்பதால், அதை பூசவில்லை* மேடையாக உருவாக்கப்பட்டிருந்த, மினி லாரியில் ஏறிய குஷ்பு, கையில் சிலம்பு ஏந்தி காட்சி கொடுத்தார். பேசி முடித்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்க வாகனத்தில் இருந்து இறங்கினார். அருகில் உள்ள கட்டடத்திற்கு சென்றபோது, அவரை சுற்றி கூட்டம் மொய்த்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கால் இடறி சரிந்தவரை, பெண் போலீசார், மகளிரணியினர் தாங்கி பிடித்தனர்.த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:அவரது அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை கண்டித்து, மதுரையில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு தமிழக அரசு மறுத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்த பா.ஜ.,வினர் அனுமதி கேட்டது முறையானது. தமிழக அரசின் கைது நடவடிக்கையை கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.பா.ஜ., பேரணியில் பங்கேற்ற ரஷ்ய பெண்
மதுரையில் பா.ஜ., மகளிரணி சார்பில் நடந்த நீதிபேரணி துவக்க நிகழ்ச்சியில் ரஷ்யாவில் இருந்து சுற்றுப்பயணமாக வந்த கத்ரீனா என்ற பெண்ணும் பங்கேற்றார். மகளிரணியினருடன் நின்றிருந்தார்.மகளிரணியினிர் செல்லாத்தம்மன் கோயில் முன்பு இருந்த உரலில் மிளகாய் வற்றலை அம்மனுக்கு பூசுவதற்காக அம்மி, உரலை பயன்படுத்தி அரைத்தனர். அதில் கத்ரீனாவும் பங்கேற்றார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''எங்குமே பெண்களுக்கு எதிராக குற்றம் நடக்கக் கூடாது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு தாயாக இருப்பது பெண்கள்தான். பெண்களுக்கு எதிராக எவ்வித வன்முறையும் நடக்கக் கூடாது. அதனால் இந்த நீதி பேரணிக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்,'' என்றார்.