அ.தி.மு.க,,வில் இருந்து எவரெல்லாம் விரும்புகின்றனரோ அனைவரும் வரட்டும்!:தி.மு.க.,
சென்னை : அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை, தி.மு.க.,வில் சேர்க்க, முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதையடுத்து, அறிவாலயத்தின் கதவுகள் அகல திறந்து வைக்கப்பட்டு, அக்கட்சியினர் தயார் நிலையில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். அதில், செந்தில் பாலாஜி மட்டும், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக மாறினார். இணைய முயற்சி கடந்த 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் என முக்கிய நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைய முயற்சி மேற்கொண்டனர். அவர்களை சேர்க்க, தி.மு.க., அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினிடம் பேசினர். ஆனால், முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.,வில் சேர்த்தால், அ.தி.மு.க., பலவீனமாகி விடும். அக்கட்சியின் ஆதார சக்தியாக உள்ள தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு சென்று விடும். அதனால், அ.தி.மு.க., இடத்தை பா.ஜ., பிடித்து விடக்கூடாது என்பதால், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை சேர்க்க, தி.மு.க., தலைமை தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கே தி.மு.க.,வில் முக்கியத்துவம் தரப்படு கிறது என்ற பேச்சு உள்ளது. இச்சூழலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய நிர்வாகி சேரும்போது, அவருக்கும், தி.மு.க., மாவட்டச் செயலர், அமைச்சர் ஆகியோருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களால், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.,வில் சேர்ப்பதை, முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து வந்தார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும், ஒரு சிலரை சேர்த்தனர். பச்சைக்கொடி ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஸ்டாலின் களமிறங்கிஉள்ளார். அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையாமல் தடுக்க முயலும் தி.மு.க., தலைமை, அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி., மைத்ரேயன் ஆகியோரை தி.மு.க.,வில் சேர்த்தனர். இப்போது, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, அ.தி.மு.க., பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர்., ஆசிரியராக இருந்த மருது அழகுராஜை சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே தி.மு.க.,வின் நோக்கம். அதற்காக, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; யாரை வேண்டுமானாலும் கட்சியில் இணைத்து பலப்படுத்துங்கள் என, ஸ்டாலின் சொல்லி விட்டார். மாவட்டங்களில், தி.மு.க., மாவட்டச் செயலர்கள், அமைச்சர்களுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளை, தி.மு.க.,வில் சேர்க்க பச்சைக்கொடி காட்டியுள்ளார். எனவே, அடுத்தடுத்து அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைவர். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளிகளை இழுக்க முயற்சிகள் நடக்கின்றன. அதேபோல, தென் மாவட்டங்களில் இருக்கும் முக்கிய அ.தி.மு.க., தலைவர் களையும், தி.மு.க., பக்கம் கொண்டு வர, தீவிர பேச்சு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 'இன்னும் பலர் தி.மு.க.,வுக்கு வருவர்'அ.தி.மு.க.,விலிருந்த மருது அழகுராஜ் இரட்டை தலைமை பிரச்னையில், பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக இருந்ததால், அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார்.பின் அவர் கூறியதாவது:20 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வுக்கு, எனது தமிழ் பேச்சு, எழுத்தை ஒப்படைத்து உழைத்தேன். பழனிசாமியின் அபகரிப்பு, ஆக்கிரமிப்பு அரசியலை கண்டித்ததால், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டேன். அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க, கடந்த நான்கரை ஆண்டுகளாக முயற்சித்தேன்.அ.தி.மு.க.,வை பழனிசாமி அபகரித்தார். இப்போது பழனிசாமியை பா.ஜ., அபகரித்து விட்டது. என் உழைப்பையும், ஆயுளையும் வீணாக்க விரும்பாமல், தி.மு.க.,வில் இணைந்து விட்டேன்.தி.மு.க., என்பது அ.தி.மு.க.,வின் எதிர் முகாம் அல்ல. தி.மு.க.,விலிருந்து அ.தி.மு.க., உருவானபோது, இரு கட்சிகளையும் ஒருங்கிணைக்க, அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரக்காயர் துவங்கி, ஒடிசா முதல்வர் பிஜு பட்நாயக் வரை பலர் முயற்சித்தனர். அது முடியாமல் போனது. இப்போது பழனிசாமி புண்ணியத்தில், இரு கட்சிகளும் ஒன்றிணையும்சூழல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து இன்னும் பலர் தி.மு.க.,வுக்கு வருவர் என்றார்.