சென்னை:தமிழகம் முழுதும் நடந்த லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தில், 62,559 வழக்குகளில், 505.78 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆர்.மகாதேவன் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுதும் லோக் அதாலத் நேற்று நடந்தது. மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்கள் அளவில், 482 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு அமர்வுகளும், மதுரை கிளையில், மூன்று அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.இந்த லோக் அதாலத்தில், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள்; காசோலை மோசடி வழக்குகள்; தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள்; நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள்; வாகன விபத்து இழப்பீடு கேட்ட வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுக்கப்பட்டன.சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத், பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி, கே.ராஜசேகர், என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கோகுல்தாஸ், ஜெயபால் ஆகியோர் தலைமையிலும்; மதுரை கிளையில், நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.சொக்கலிங்கம் தலைமையிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமையில், கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.மொத்தம் 62,559 வழக்குகளில், 505.78 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தில், 187 வழக்குகளில், 20.59 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத் அமர்வுகளை, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டீக்காராமன் பார்வையிட்டனர். வாகன விபத்தில், கால் இழந்த ஒருவருக்கு, 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க லோக் அதாலத்தில் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை, பாதிக்கப்பட்ட நபருக்கு, தலைமை நீதிபதி வழங்கினார். லோக் அதாலத்துக்கான ஏற்பாடுகளை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நஷிர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் கே.சுதா ஆகியோர் செய்திருந்தனர்.