நெல்லை: இண்டியா கூட்டணியில் உள்ள திமுக.,வும் காங்கிரசும் வெறுப்பு, எதிர்ப்பு சித்தாந்தங்களை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் தொகுதி பா.ஜ., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் பா.ஜ., தனது தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கான பல திட்டங்களை அறிவித்துள்ளோம். ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள், முத்ரா திட்டத்தில் கூடுதல் கடன் வசதி போன்ற பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.மகளிர் ஆதரவு
இந்த மக்கள் கூட்டத்தை பார்த்து இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு தூக்கம் தொலைந்திருக்கும். புதிய அரசு அமைந்த உடன் தெற்கில் இருந்தும் புல்லட் ரயில் இயக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பெண்கள் என்னை பெருமளவில் ஆதரிப்பது பலரும் ஆச்சரியமடைகின்றனர். அதற்கு காரணம், நான் மக்களின் துன்பங்களை அறிந்து திட்டங்களை கொண்டுவருவதால் மக்கள் ஆதரிக்கின்றனர். மகளிருக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம். தேர்தல் அறிக்கையில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என உறுதியளித்துள்ளோம்.தேசப்பற்று - வீரம்
இண்டியா கூட்டணியில் உள்ள திமுக.,வும் காங்கிரசும் வெறுப்பு, எதிர்ப்பு சித்தாந்தங்களை கொண்டுள்ளது. அவர்கள் தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் அழிக்க நினைக்கின்றனர். செங்கோல், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என நினைத்து பாருங்கள். தென் தமிழகத்தின் இந்த பகுதி தேசப்பற்றுக்கும், வீரத்திற்கும் பெயர் பெற்றது. இந்தியாவை நேசிப்போரின் ஒரே தேர்வு பா.ஜ.,வாக தான் இருக்கும். காமராஜரை பின்பற்றி, நேர்மையான அரசியலை செய்கிறது; எம்ஜிஆரின் கனவுகளை தமிழகத்தில் பா.ஜ., முன்னெடுத்து செல்கிறது. ஜெயலலிதாவை சட்டசபையில் அவமதித்ததை மறக்க முடியாது.தூய்மையான அரசியல்
தூய்மையான அரசியலே எங்கள் லட்சியம். கச்சத்தீவை இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு கொடுத்தது திமுக, காங்கிரஸ்; இது தேச விரோதம், மன்னிக்க முடியாத பாவம். தமிழகம் தற்போது போதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியோடு இங்கு போதைப்பொருள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. அடுத்த தலைமுறையினரை போதையில்லாத நிலைக்கு பா.ஜ., கொண்டு செல்லும். தேசத்தைவிட்டே போதைப்பொருட்களை ஒழிப்பேன் என உறுதியளிக்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகத்திற்கு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
யானை சிலை பரிசு
திருநெல்வேலிக்கு பிரசாரம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சார்பில் யானை சிலை பரிசாக வழங்கப்பட்டது.பிளாஸ் லைட்
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.,வுக்கான ஆதரவை இப்போது தங்கள் மொபைலில் உள்ள 'பிளாஸ் லைட்'டை ஒளிரவிடுமாறு வலியுறுத்தினார். உடனே தொண்டர்கள் அனைவரும் தங்கள் மொபைலில் 'பிளாஸ்' எறியவிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
திமுக மீது கோபம்
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எங்களின் நோக்கம். இதற்காக நாட்டில் பலரும் நேர்மறையான மற்றும் புதுமையான பரிந்துரைகளை அளித்துள்ளனர். அதனை நடைமுறைப்படுத்த முடிந்தால், நாடு நிறைய பயனடையும். அமலாக்கத்துறை சிறப்பாக செயல்படுகிறது, 97 சதவீத வழக்குகள் அரசியலில் இல்லாதவர்கள் மீது உள்ளன. சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களுடன் (திமுக உடன்) கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம் என்ன என காங்கிரசிடம் கேட்க வேண்டும். காங்கிரஸ் அதன் அடிப்படைத் தன்மையை இழந்துவிட்டதா? தமிழகத்தில் திமுக மீதான மக்களின் கோபம் பா.ஜ.,வுக்கு சாதமாக மாறி வருகிறது. திமுக மீதான மக்கள் கோவம் தான் எங்களது வெற்றி. சனாதன விவகாரத்தில் திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ராமர் கோயிலை அரசியல் ஆதாயமாக எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி வந்தனர். இப்போது பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பிரச்னை அவர்களின் கையை விட்டுப் போய்விட்டது. தற்போது ராமர் கோயில் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.