உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு; தென்மாவட்டங்களில் கனமழை தொடரும்

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு; தென்மாவட்டங்களில் கனமழை தொடரும்

சென்னை: 'அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் அதிகபட்சமாக, தலா, 17 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்ததாக, அதேமாவட்டம் காக்காச்சியில், 14, மாஞ்சோலையில், 13; கடலுார் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 8; திருவாரூரில், 7; கடலுார் மாவட்டம் புவனகிரி, புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலத்தில், தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மலேஷியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

740 கி.மீ., தொலைவு

அந்தமான் நிகோபார் தீவிற்கு கிழக்கு, தென்கிழக்கில், 740 கி.மீ., தொலைவில் நிலவும் இந்த தாழ்வு மண்டலம், இன்று அல்லது நாளை, மேற்கு, வடமேற்கு திசையில் மேலும் வலுவடைந்து நகரக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன்பின், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், டிசம்பர், 1ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சூறாவளிக்காற்று

துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், சில இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, 11 மாவட்டங்களில், வரும், 29 முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ