கூட்டுறவு வங்கிகளில் டிபாசிட் செய்யுங்கள்: பெரிய கருப்பன்
சென்னை:''மற்றொரு துறைக்கு சொந்தமான இடத்தில், மாநில கூட்டுறவு வங்கி கிளை அமைக்க முடியாது,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:காங்கிரஸ் - ஹசன் மவுலானா: சென்னை வேளச்சேரி, கிழக்கு, மேற்கு என, இரண்டு பகுதிகளாக உள்ளது. இங்கு தண்டீஸ்வரத்தில் கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. கிழக்கு வேளச்சேரியில் வங்கி கிளை இல்லை.சாலை போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அங்கு கூட்டுறவு வங்கி கிளை அமைத்தால் தரமணி, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். தேசிய வங்கிகளில் கல்வி கடன் போதிய அளவில் தருவது இல்லை. மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கல்வி கடன் வழங்க வேண்டும்.அமைச்சர் பெரிய கருப்பன்: வேளச்சேரியில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கிளையும், சென்னை மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கி கிளையும் செயல்படுகிறது. அங்கு புதிதாக வங்கி கிளை அமைப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை. பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால், சாலை போக்குவரத்து துறைக்கு சொந்தான இடத்தில், கூட்டுறவு வங்கி கிளை அமைக்க முடியாது. கூட்டுறவு வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கப்படுகிறது; ஓரளவுதான் வழங்க முடியும். வங்கியில் உள்ள உறுப்பினர்கள் செலுத்தும் தொகைகளை வைத்துதான் கல்வி கடன், சிறுதொழில் கடன், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் வழங்க முடியும். எனவே, கூட்டுறவு வங்கிகளில், 'டிபாசிட்' செய்வது குறித்து, விழிப்புணர்வு பிரசாரமாக செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வாய்ப்பும், இடமும் இருந்தால், கூட்டுறவு வங்கி கிளை திறப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.