உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை

கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் சாலை, காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் சதீஷ்குமார், 27. இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி இரவு, ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை, கொலை செய்து தலையை துண்டித்து, உடலை தண்டவாளத்திலும், தலையை சப்த கன்னியம்மன் கோவில் வாசல் முன்பாகவும் வைக்கப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த சதீஷ்குமார் நேற்று வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான சேப்பனாவாரியை சேர்ந்த சபில் என்பவர் விபத்தில் காயமடைந்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்தார்.அவரை தனது நண்பர்களுடன் சதீஷ்குமார் நேற்று மதியம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்தார்.அப்போது, இறந்த மணிகண்டனின் நண்பர்கள் சிலர், சதீஷ்குமார் மருத்துவக்கல்லுாரிக்கு வந்துள்ளதை அறிந்து அங்கு வந்தனர். பிறகு சதீஷ்குமாரிடம் பேச வேண்டும் என, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.இதையடுத்து தனியாக சென்ற சதீஷ்குமார் வெகுநேரமாகியும் வரவில்லை என்பதால், அவரது நண்பர்கள் சென்று பார்த்து போது, ரத்த வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் கிடந்தார். உடனே நண்பர்கள் சதீஷ்குமாரை சிகிச்சைக்காக துாக்கி வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவலறிந்த மருத்துவக்கல்லுாரி போலீசார் நடத்திய விசாரணையில், டீக்கடை பகுதியில் அரிவாளை முன்கூட்டியே பதுக்கி வைத்து விட்டு, சதீஷ்குமாரை அழைத்து சென்று, மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வெட்டியுள்ளது சி.சி.டி.வி.,யில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.40 லட்சம் கேட்டு டீ கடைக்காரர் கடத்தல்

மதுரை கூடல்நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 58. அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, காரில் காத்திருந்த ஆறு பேர், அவரை கடத்தினர். பின், அவரது மொபைல் போன் மூலம் பேசிய மர்ம நபர்கள், பழனிசாமியின் இரு மகன்களிடம் 40 லட்சம் ரூபாய் கேட்டனர். கூடல்புதுார் போலீசில் மகன்கள் புகார் செய்தனர்.இந்நிலையில், பழனிசாமியை கடத்தியவர்கள் தொடர்ந்து மகன்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். காலை 11:00 மணிக்கு அவர்கள் மதுரை மாவட்டம் குருவித்துறை அருகே இருப்பது தெரிந்தது; தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மூவர் தப்பி ஓடினர். மூவர் பிடிபட்டனர். பழனிசாமி மீட்கப்பட்டார்.விசாரணையில், கடத்தியவர்கள் தேனி மாவட்டம், மயிலாடும்பாறையைச் சேர்ந்த குணசேகர், 26, சுதாகர், 24, மணிகண்டன், 19, உட்பட 6 பேர் எனத் தெரிந்தது. கூடல்நகரில் வசிக்கும் பழனிசாமியின் தம்பி பரமன் மகள் பாண்டீஸ்வரி துாண்டுதலால், கூலிப்படையால் அவர் கடத்தப்பட்டது தெரிந்தது.

விருதுகளை திருப்பி தந்து மன்னிப்பு கோரிய திருடர்கள்

உசிலம்பட்டியில் காக்கா முட்டை, கடைசி விவசாயி' திரைப்படங்களின் இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதுகளை, 'உங்கள் உழைப்பு உங்களுக்கு' என்று மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து, அவற்றை திருப்பி வைத்த, 'மனிதாபிமான' திருடர்களை போலீசார் தேடுகின்றனர்.

ரூ.40 லட்சம் மோசடி; ஏமாற்றியவர் கைது

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 83. இவர், 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை, கோவையில் உள்ள தன் சகோதரி வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது, கோவிந்தனின் தங்கை மகனும், நகைப்பட்டறை உரிமையாளருமான ஸ்ரீகாந்த், 45, என்பவர் பழக்கமானார்.அவர், கோவிந்தனிடம், 'இருவரும் கோவையில் புதிய நகைக்கடை துவங்கலாம். 40 லட்சம் ரூபாய் கொடுத்தால், பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன்' எனக் கூறினார். அதை உண்மை என நம்பிய கோவிந்தன், ஸ்ரீகாந்திடம், 40 லட்சத்தை கொடுத்தார். ஆனால், ஸ்ரீகாந்த், நகைக்கடை துவங்கவில்லை. கோவிந்தன் பணத்தை திருப்பிக் கேட்டார். தராததால் செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார், ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

பெண் தற்கொலை: தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியில் பாலியல் மிரட்டலால் மனவேதனை அடைந்த 27 வயது பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எனகர்சாமி 33, என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வீட்டில் 16 பவுன் நகை ரூ.1 லட்சம் திருட்டு

துாத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன் 60. இங்குள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் பிப். 6 ல் திருப்பதிக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீட்டுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமரை அவமதித்து பேசிய பள்ளி ஆசிரியை 'சஸ்பெண்ட்'

கர்நாடக மாநிலம், மங்களூரில் செயின்ட் ஜெரோசா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆசிரியை சிஸ்டர் பிரபா. சமீபத்தில் இவர், 'ஒர்க் ஈஸ் ஒர்ஷிப்' என்ற தலைப்பில் பாடம் நடத்தினார். அப்போது அவர், அயோத்தி ராமரை கல் எனப் பேசியுள்ளார். இதையறிந்து, கொதிப்படைந்த மாணவர்களின் பெற்றோர், ஹிந்து அமைப்பினர், ராமரை அவமதித்த ஆசிரியை பிரபா மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த, பள்ளி நிர்வாகம், ஆசிரியை பிரபாவை சஸ்பெண்ட் செய்தது.

ரூ.1.45 கோடி 'குட்கா' பறிமுதல்

பெங்களூரில், தடை செய்யப்பட்ட குட்காவை, சட்ட விரோதமாக விற்பனை செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 1.45 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை