மேட்டூர் : காவிரியாற்றில் தவறி விழுந்து, உயிரிழந்த இரு பெண் குழந்தைகளை, மேட்டூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்டனர். சேலம், கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த விஜய் - ராணி தம்பதியரின் மகள்கள் மேகா, 9, சுபிக்ஷா, 6. ஐந்து மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவர்களின் தந்தை, இரு ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.
கிச்சிபாளையத்தில் தையல் கடை நடத்தி வரும் ராணி, நேற்றுமுன்தினம், மேட்டூர் முனியப்பன் கோவில் அருகிலுள்ள காவியாற்று படித்துறையில் இரு குழந்தைகளை விட்டு, ஆற்றில் குளிக்க சென்றார். கரைக்கு வந்தபோது, இரு குழந்தைகளையும் காணாமல் அதிர்ச்சியடைந்த ராணி, காவிரியாற்றில் இறங்கி தேடினார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, குழந்தைகளை ஆற்றில் தேடினர்.
இரவாகியும், மூழ்கிய குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை, மேட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பரிசலில் சென்று, கரையோர பகுதிகளில் குழந்தைகளை தேடினர். காலை 7 மணிக்கு, காவிரி பாலம் அருகே, கரை ஒதுங்கிய சுபிக்ஷா உடலையும், 10 மணி அளவில் எம்.ஜி.ஆர்., பாலம் அருகே, மேகலா உடலையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.