அஜித் ரசிகர்களை வளைக்க பிரீ ஷோ: அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு ஏற்பாடு
துாத்துக்குடி: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், அவருக்கு திரையுலகில் போட்டியாக கருதப்பட்ட அஜித் ரசிகர்களை தி.மு.க., பக்கம் இழுக்கும் வகையில், அமைச்சர் கீதா ஜீவன் அஜித் நடித்த படத்தின் 'பிரீ ஷோ'வுக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.நடிகர் அஜித் நடிப்பில், குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில், அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில், அஜித் ரசிகர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடிய அவர், திரையரங்கில் சுமார் அரை மணி நேரம் அமர்ந்து, அஜித் நடித்த படத்தைப் பார்த்து ரசித்தார்.துாத்துக்குடியில் உள்ள ரசிகர்கள் காட்சிக்கான முழு பணத்தையும் தானே ஏற்றுக்கொண்டு செலுத்துவதாக ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன். ரசிகர்களுக்கான காட்சி என்றால் இலவசமாக படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்வதோடு, குறிப்பிட்ட நடிகர் படம் அச்சிடப்பட்ட டிக்கெட், ரசிகர்களுக்கு வழங்கப்படும். ஆனால், நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ரசிகர்களுக்காக வழங்கப்பட்ட டிக்கெட்டில் அமைச்சர் கீதா ஜீவன் படமும் இடம் பெற்றிருந்தது.
உதவினேன்!
அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர், அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்பட டிக்கெட் தொடர்பாக உதவி கேட்டனர்; செய்து கொடுத்தேன். எங்கள் வீட்டு பக்கம் உள்ள போல்பேட்டை, முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்கள். அதனால், கேட்டதும் உதவினேன். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை.- கீதா ஜீவன், தமிழக அமைச்சர்