உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேருஜி கலையரங்கை குத்தகைக்கு விட்ட தி.மு.க., மேயருக்கு அமைச்சர் நேரு டோஸ்

நேருஜி கலையரங்கை குத்தகைக்கு விட்ட தி.மு.க., மேயருக்கு அமைச்சர் நேரு டோஸ்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நேருஜி கலையரங்கத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்ட தி.மு.க., மேயரை அமைச்சர் கே.என். நேரு கண்டித்து டோஸ் விட்டார்.திருநெல்வேலி மாநகராட்சிக்கு, 2016 முதல் 2021 வரை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், வர்த்தக மையம், வ.உ.சி., மைதானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரிக்கு அருகில் நேருஜி சிறுவர் மைதானமாக இருந்த இடத்தில், ரூ.12 கோடி செலவில் நேருஜி கலையரங்கம் கட்டப்பட்டது. பொருநை இலக்கிய விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகள் அங்கு நடந்தன. தற்போது அந்த கலையரங்கத்தை தனியார் ஜவுளி நிறுவனத்தினர், ஆண்டுக்கு ரூ.28 லட்சத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர்.பாரம்பரியமாக நேருஜி கலையரங்கம் என செயல்பட்டு வந்த கட்டடம், தனியார் ஜவுளி நிறுவனத்தின் சரக்கு வைக்கும் கோடவுனாக மாற உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட அமைச்சர் நேரு, மேயர் ராமகிருஷ்ணனை அழைத்து, நேருஜி கலையரங்கத்தை ஏன் தனியாருக்கு குத்தகைக்கு விட்டீர்கள் என கேட்டு டோஸ் விட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா கூறுகையில், ''மாநகராட்சி திட்டங்கள் வருமானத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேருஜி கலையரங்கம் முறைப்படி டெண்டர் விடப்பட்டதில் ஏழு பேர் பங்கேற்றனர். இதில் ஒருவர் மட்டும் ரூ. 28 லட்சத்துக்கு எடுத்துள்ளார். அங்கு ஜவுளிக்கடை கோடவுன் போன்றவை செயல்பட அனுமதிக்க மாட்டோம். திட்ட விதிமுறைகள் படியே செயல்பட அனுமதிப்போம்,'' என்றார். மேயர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''நேருஜி கலையரங்கம் எதுக்காக உருவாக்கப்பட்டதோ அதற்காகவே செயல்படுத்தப்படும். இதை அமைச்சரிடம் நேரில் விளக்கி விட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ