கோவை: கோவையில் உள்ள லீ மெரீடியன் ஓட்டலில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில்'தமிழகம் வளர்கிறது'(டி.என்., ரைசிங்) என்ற மூன்றாவது முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று நடந்தது. இதில், தொழில்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: பாரம்பரிய தொழில்களுக்கு பெயர் பெற்ற கொங்கு மண்டலம், தற்போது விண்வெளி, பாதுகாப்பு, மின்னணுவியல் போன்ற நவீனத் துறைகளில் கால்பதித்து வருகிறது. 2021ம் ஆண்டு முதல் இதுவரை மேற்கு மண்டலத்தில் மட்டும், 170 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் வாயிலாக ரூ.97 ஆயிரத்து, 374 கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று மேலும் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளன. தமிழக அரசு வரும், 2030ம் ஆண்டுக்குள் 'ஒரு டிரில்லியன் டாலர்' பொருளாதாரத்தை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தொழில் வளர்ச்சிக்காக சர்வதேசத் திறன் மையங்கள்(ஜி.சி.சி.,) இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன. உயர் மதிப்புள்ள சர்வதேச செயல்பாடுகளுக்கான, முக்கிய மையமாக தமிழகம் மாறிவருவதையே இது காட்டுகிறது. இது மாநிலத்தின் அடுத்தக்கட்ட உலகளாவிய வணிக வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. தொடர் நடவடிக்கைகளால் செழிப்பான பாதையில், தமிழக தொழில் துறை பயணித்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
'ஆராய்ச்சியின் தலைநகராக தமிழகம்'
கோவையில் தொழில் துறை அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: 'செமிகண்டகர்' செய்வதற்கான உபகரணங்கள் தயாரிப்பு, கோவையில் அடுத்தகட்டத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. 'ஆர் அண்ட் டி' எனும் பெரிய நிலைக்குவளர வேண்டும் என்பது முக்கிய நோக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இங்கு அதிகம் உள்ளன. அதை பயன்படுத்தி 'ஆர் அண்ட் டி'யில் முன்னேற வேண்டும். நாட்டில் ஆராய்ச்சியின் தலைநகராக தமிழகம்குறிப்பாக, சென்னையும், கோவையும் திகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.நகரங்கள் மிகுந்த தமிழகத்தில், கிராமப்புறங்களிலும் தொழில் துவங்கி, உற்பத்தி செய்யமுக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு, நிலத்தின் விலை அதிகம். கிராமப்புறங்களில் தொழில் துவங்க நிலம் கோருபவர்களுக்கு, ஓரளவு சலுகை விலையில் வழங்க முடியுமே தவிர, இலவசமாக நிலம் தர முடியாது. தமிழகத்தில் 'எலக்ட்ரானிக்ஸ்' பொருட்கள் உற்பத்தி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்துாரில் அதிகம் உள்ளது. கோவையில் பம்ப் உற்பத்தி அதிகம் உள்ளது. இப்படி, தமிழகம் முழுவதும் இருக்கும் கிளஸ்டர்களை இணைப்பதே, எங்களது முக்கிய நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.