அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் எடுப்பவர் மோடி: துணை ஜனாதிபதி
திருப்பூர்: ''துணை ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த தேர்வுக்காக பிரதமர் மோடி முயற்சித்தார்; கடைசி நேரத்தில் முடியாமல் போனது,'' என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், முதன்முதலாக தன் சொந்த ஊரான திருப்பூருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். அவருக்கு, 'திருப்பூர் பீப்பிள்ஸ் போரம்' மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசியதாவது: நம் முடிவின்படி மட்டும் நம் பயணம் தொடர்வதில்லை; காலச் சூழலும், இறை விருப்பமும் வேறாக இருக்கும். வங்கதேசத்துக்கு ஆடை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த போது, முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என நான் நினைக்கவே இல்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல, அனைவரையும் அரவணைத்து செல்லும் மகத்தான தலைவரை பார்த்ததில்லை. துணை ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த தேர்வுக்காக, பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சி எடுத்தார்; கடைசி நேரத்தில் முடியாமல் போனது. அப்போது, தமிழக சமூக வலைதளங்களில், 'சி.பி.ஆர்., தோற்கப் போகிறார்; இதோடு மோடியும் தோற்கப் போகிறார்' என்று பதிவிட்டிருந்தனர். அப்போது, இறை நம்பிக்கை தான் என்னை தேற்றியது. பிரதமர் மோடியின் மிகப் பெரிய 'பிளஸ் பாயின்ட்' எது என்றால், அவரிடம் யாரும், எந்த கருத்தையும், எத்தனை மணி நேரமானாலும் பேசலாம். அப்படி பேசும்போது, அன்னப்பறவை போல் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வார். எந்த இடத்திலும் தன்னிலை மறந்து பேசாத தலைவராக மோடி திகழ்கிறார். அப்படியான ஒருவரால் மட்டுமே தேசத்தை வழிநடத்த முடியும். அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழல் நிலவுகிறது. உழைப்பும் உழைப்பாளர்களும் என்றுமே வீண் போக மாட்டார்கள். அமெரிக்க ஏற்றுமதி இரு மடங்காக உயரும் நாள் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.