உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!

அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் காலமானார்!

ஊட்டி: இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானியுமான எம்.ஆர்.சீனிவாசன் ஊட்டியில் இன்று (மே 20) காலமானார். இவருக்கு வயது 95.பெங்களூருவில் ஜனவரி 5ம் தேதி 1930ம் ஆண்டு எம்.ஆர்.சீனிவாசன் பிறந்தார். இவர் 1950ம் ஆண்டு இயந்திர பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் 1952ல் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1954ல் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.இவர் செப்டம்பர் 1955ம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு அணு சக்தி நிலையங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள், அது தொடர்பான கொள்கை உருவாக்குவது என அனைத்திலும் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.அணுசக்தி வாரிய தலைவர், அணு சக்தி துறை செயலாளர் என பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.ஓய்வுக்கு பிறகு ஊட்டியில் வசித்து வந்த அவர், இன்று (மே 20) காலமானார். அவரது மறைவுக்கு, விஞ்ஞானிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி இரங்கல்பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் முன்னோடியான எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அணுசக்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.பல இளம் விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்ததற்கு, இந்தியா எப்போதும் அவருக்கு நன்றி தெரிவிக்கும். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கார்கே இரங்கல்

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், ''பத்மவிபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் துறைக்கு பேரிழப்பு ஆகும். இவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை அணு சக்தி துறையில் வளர்ச்சியை உருவாக்கியது. இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், '' எம்.ஆர்.சீனிவாசன் நாட்டில் 18 அணு சக்தி நிலையங்களை உருவாக்குவதற்கு தலைமை வகித்து பணியாற்றினார். நாடு தன்னிறைவு அடைவதற்கு பேருதவி புரிந்தார். தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kulandai kannan
மே 20, 2025 19:02

இவருக்கும் பத்ம விபூஷன், ரஜினிகாந்துக்கும் பத்ம விபூஷன்.


Barakat Ali
மே 21, 2025 07:30

பத்ம விருதுகளிலும் அரசியல் உண்டு .....


என்றும் இந்தியன்
மே 20, 2025 17:02

அம்மாடி 95 வயதா???வாழ்க வளர்க. தங்கள் சாதனைக்கு பாராட்டுக்கள்


N.Purushothaman
மே 20, 2025 15:27

ஆழ்ந்த இரங்கல்கள்...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


JAGADEESANRAJAMANI
மே 20, 2025 13:28

தங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


Ramesh Sargam
மே 20, 2025 12:42

ஓம் சாந்தி. ஆன்மா சாந்தி அடையட்டும்.


ஆரூர் ரங்
மே 20, 2025 11:58

உயர் பதவி வகித்த முதல் அணு என்ஜினீயர். கல்பாக்கம் அணுவுலை இவரது சாதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை