சென்னை:இந்தியாவில் முதன்முறையாக, தமிழகத்தில், 1622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு, தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும், 159 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டிற்காக, ஏற்கனவே தேசிய அளவிலான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களில், 34 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.இதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில், 1,622 அரசு ஆரம்ப சுகாதார ஆய்வகங்களுக்கு, மத்திய அரசு, தேசிய தர நிர்ணய அங்கீகார வாரிய சான்றிதழ்கள் வழங்கி உள்ளது.இதற்கான சான்றிதழை, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது.அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 29 வகையான பரிசோதனைகள், இதுவரை செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, 34 பரிசோதனைகள் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை போல, ஆய்வக வசதியும் மக்களை தேடி செல்லும் வகையிலான திட்டம் துவங்கப்பட்டது.இத்திட்டத்தில், 34 வகையான ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற, ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களின் சேவையை பாராட்டி, மத்திய அரசு தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.