சென்னை: தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு, அடுத்த மாதம் புதிய டி.ஜி.பி., நியமிக்கப்பட உள்ளார். மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சீமா அகர்வாலுக்கு, அதிக வாய்ப்பு இருப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால், கடந்த ஆக.,31ல் ஓய்வு பெற்றார். புதிய டி.ஜி.பி.,யாக, தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், ஆவின் விஜிலன்ஸ் முதன்மை அதிகாரி ராஜிவ்குமார், காவல் உயர் பயிற்சியக டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என, எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்புவதில் துவங்கி, அடுத்தடுத்த நிகழ்வுகளில், அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது. எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. இவர்கள் கூறிய நபர்களை, மத்திய அரசு ஏற்கவில்லை. மத்திய அரசு கூறிய நபரை, தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால் டி.ஜி.பி., இன்னமும் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு டி.ஜி.பி.,யாக, காவல் துறையின் நிர்வாகப்பிரிவில் பணிபுரியும் வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். தற்போது, மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக உள்ள, டேவிட்சன் தேவாசீர்வாதம், அடுத்த மாதம், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற உள்ளார். அவரை புதிய டி.ஜி.பி.,யாக நியமிக்க, அரசு விரும்புவதால், இவ்வளவு பிரச்னை என, குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது அரசின் பிடிவாதத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அடுத்த மாதம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு புதிய டி.ஜி.பி., நியமிக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக, தாமரை இலை தண்ணீர் போல், பொறுப்பு டி.ஜி.பி., பதவியில் வெங்கடராமன் நீடித்து வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக, அவருக்கு எளிதான பணி தேவைப்படுகிறது. ஜனவரியில் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெறும், டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டால், சட்டசபை தேர்தல் நேரத்தில், அவரை தேர்தல் கமிஷன் மாற்ற வாய்ப்புள்ளது. எனவே, அவரை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக பணியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜிவ்குமார், சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோரில் ஒருவரை, அடுத்த மாதம் புதிய டி.ஜி.பி.,யாக நியமிக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அதிகார மையங்கள் சம்மதம் தெரிவித்து விட்டதால், சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.