உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய மின் நிலையங்களில் விரைவில் உற்பத்தி நிலக்கரி சாம்பலை சேமிக்க கட்டமைப்பு அவசியம்

புதிய மின் நிலையங்களில் விரைவில் உற்பத்தி நிலக்கரி சாம்பலை சேமிக்க கட்டமைப்பு அவசியம்

சென்னை: வட சென்னை - 3 அனல் மின் நிலையத்தில் உற்பத்தி துவங்கியதாலும், எண்ணுார் சிறப்பு அனல் மின் நிலைய கட்டுமானம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாலும், ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் நிலக்கரி சாம்பல் கொட்டப்படும் குளத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை, விரைவாக துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா, 600 மெகா வாட் திறன் உடைய வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியை எரிப்பதில் இருந்து சாம்பல் வெளியேறுகிறது. சாம்பல் குளம் இந்த சாம்பல், ஈரச் சாம்பலாக, வட சென்னை மின் நிலையத்தில் இருந்து, ராட்சத குழாய் வழித்தடங்களில் எடுத்து செல்லப்பட்டு, 5 கி.மீ., துாரம் உள்ள செப்பாக்கம் அருகில் உள்ள குளத்தில் கொட்டப்படுகிறது. இதற்காக, 300 ஏக்கரில் சாம்பல் குளம் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் சராசரியாக, 8,000 - 10,000 டன் சாம்பல் அங்கு கொட்டப்படுகிறது. வட சென்னை மின் நிலையம் அருகில் மின் வாரியம், 800 மெகா வாட் திறனில், வட சென்னை - 3 அனல் மின் நிலையம் மற்றும் 1,320 மெகா வாட் திறனில் எண்ணுார் சிறப்பு அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. இதில், வட சென்னை - 3 நிலையத்தில், சோதனை மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. எண்ணுார் சிறப்பு மின் நிலையத்தின் கட்டுமான பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகளும், ஏற்கனவே உள்ள சாம்பல் குளத்தில் கொட்டப்பட உள்ளன. அதேசமயம், சாம்பல் குளத்தில் போதிய இட வசதி இல்லாதது, முறையான பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. எனவே, சாம்பல் குளத்தை விரைவாக கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாம்பல் குளத்தில் கொட்டப்படும் சாம்பலின் ஈரத்தன்மையை மண் உறிஞ்சி விடுகிறது. பின், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிக்கு சாம்பல் வழங்கப்படுகிறது. சாம்பல் குளத்தை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் சீரமைப்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குளத்தின் உயரத்தை அதிகரிப்பது, கரைகளை வலுப்படுத்துவது என, கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பின், அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, புதிய மின் நிலையங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதால், அதிகளவில் சாம்பல் வெளியேறும். அதற்கு ஏற்ப, சாம்பல் குளத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தவில்லை எனில், சாம்பலை சேமிப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கப்படுவதற்கு முன், சாம்பல் குளத்தை கட்டமைப்பது அவசியம். அந்த பணிகளை விரைவாக துவக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை