எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்ய முடியாது: பழனிசாமி
கள்ளக்குறிச்சி: ''எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்ய முடியாது,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:அ.தி.மு.க.,வில் இளைஞர் பட்டாளங்களை வலுசேர்க்கும் வகையில் பாக கிளைகளை உருவாக்கியுள்ளோம். அவர்களுக்கு மூத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் எதிரிகளை ஓட, ஓட விரட்ட வேண்டும்.அ.தி.மு.க., தலைமையில் பலமான கூட்டணி அமையும். முதலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதை பார்த்ததும், ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது, நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.,வுக்கு என்ன வந்தது? ஓட்டுகள் சிதறக்கூடாது என்ற நோக்கத்தில் கூட்டணி வைத்துள்ளோம்.அ.தி.மு.க.,வை பா.ஜ., கபளீகரம் செய்துவிடும் என சிலர் தெரிவிக்கின்றனர். 31 ஆண்டுகள் ஆட்சி செய்து, பொன்விழா கண்ட அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது. கருணாநிதியாலேயே அ.தி.மு.க., வை அழிக்க முடியவில்லை.கடந்த அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க சில துரோகிகள் ஸ்டாலினுடன் சேர்ந்து சதி செய்தனர். அதனை உடைத்தெறிந்தோம். அ.தி.மு.க.,வை ஒரு போதும் வீழ்த்த முடியாது.கடந்த 2011 சட்டசபை தேர்தலில் எதிர்க் கட்சியாக கூட இல்லாத தி.மு.க.,விற்கு, எங்களை விமர்சனம் செய்ய தகுதியில்லை. கடந்த தேர்தலில் பொய்யான, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார்.ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருட்கள் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. கேவலமான ஆட்சி நடத்துகின்றனர். பத்திரப்பதிவு துறையில் சொத்தை விற்றாலும், வாங்கினாலும் லஞ்சம். இதுபோன்று அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.கமிஷன், கலெக் ஷன், கரெப்ஷனாக உள்ள தி.மு.க., ஆட்சியில் டாஸ்மாக் உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. டாஸ்மாக் ஊழலால் செந்தில் பாலாஜியை, 10 ரூபாய் பாலாஜி என மக்கள் அழைக்கின்றனர். ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் தி.மு.க., அமைச்சர்கள் மீது, பல்வேறு ஊழல் வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன.அன்றிருந்த பழனிசாமி வேறு, இனி பார்க்க போகும் பழனிசாமி வேறு. கடந்த நான்காண்டுகளில் பெரிய திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. போட்டோஷூட் நடத்தி, விளம்பர மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.வரும் தேர்தலில் அ.தி.மு.க., தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு பழனிசாமி பேசினார்.