வடகிழக்கு பருவக்காற்று இரு நாட்களில் விலகும்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில், வடகிழக்கு பருவக்காற்று, அடுத்த இரண்டு நாட்களில் விலக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில், வடகிழக்கு பருவமழை அக்., 15ல் துவங்கியது. இதில் டிச., 31 வரையிலான காலத்தில் இயல்பைவிட, 33 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. மழைப்பொழிவு கணக்கு, டிச., 31ல் முடிந்தாலும், வடகிழக்கு பருவக்காற்று ஜன., இரண்டாவது வாரத்தில் தான் விலகும். அந்த வகையில், 2024 அக்., 15ல் துவங்கிய வடகிழக்கு பருவக்காற்று, அடுத்த இரண்டு நாட்களில் விலகுவதற்கான சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலானப் பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படும். காலை வேளையில், லேசான பனி மூட்டம் காணப்படும். நாளை மறுநாள் முதல், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன., 30ல் கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும். காலை வேளை லேசான பனி மூட்டம் காணப்படும்மேலும் ஜன.31ல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.