உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் தீவிரம்

கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் தீவிரம்

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளில், அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில், கிரானைட் குவாரிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் கிடைத்த தகவலின்படி, உயர் நீதிமன்றம் இதில் நேரடியாக தலையிட்டது.

அறிவிப்பு

முறைகேடுகள் தொடர் பான ஆதாரங்கள் அடிப்படையில், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிதாக கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என, 2017ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. புதிதாக யாருக்கும் கிரானைட் குவாரி உரிமம் வழங்குவதில்லை என்று, தமிழக அரசும், 2020ல் அறிவித்தது.இந்நிலையில், 2021 ஆட்சி மாற்றத்துக்கு பின், கனிமவளத்துறைக்கு பொறுப்பேற்ற அமைச்சர் துரைமுருகன், கிரானைட் தொழில் துறைக்கு புத்துயிர் ஊட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டார்.அதன் அடிப்படையில், புதிதாக கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை, மாவட்ட கலெக்டர்கள் துவக்கி உள்ளனர். குறிப்பாக, முறைகேடு புகார் எழுந்த மதுரை மாவட்டத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், புதிதாக குவாரிகள் அமைப்பதற்காக, விண்ணப்பங்கள் பெறும் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

ஆர்வம்

தற்போது திருவண்ணா மலை மாவட்டத்தில், 11 இடங்களில் புதிய கருப்பு கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்க முடிவாகி உள்ளது. இதற்கான அறிவிக்கையை, மாவட்ட கலெக்டர் வெளியிட்டுஉள்ளார். சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என, கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மணல் குவாரிகளில், தனியார் ஒப்பந்ததாரர்களால் எழுந்த பிரச்னை அமலாக்கத்துறை விசாரணை வரை சென்றுள்ளது. இந்தச் சூழலில், சுற்றுச் சூழல் அனுமதி இருந்தும், புதிய மணல் குவாரி களை திறக்க தயங்கும் அதிகாரிகள், கிரானைட் குவாரிகள் திறப்பில், கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விதிகளுக்கு உட்பட்டு உரிமம்

கனிம வளத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன் எழுந்த முறைகேடு புகார்கள் குறித்து தெரியும். அது தொடர்பான வழக்குகள், வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அதே நேரம், அரசுக்கு வருவாய் தரும் இத்துறையை ஒட்டு மொத்தமாக முடக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பிரச்னைகள் இல்லாத புதிய இடங்களில், விதிகளுக்கு உட்பட்டு குவாரி உரிமங்கள் வழங்கப்பட உள்ளன.அரசின் அனுமதியுடன், கலெக்டர்கள் வாயிலாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக உரிமம் பெற்றவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜன 22, 2024 09:18

இயற்க்கை கனிம வளத்தை தேசியாவுடைமையாக்கினால்தான் இந்த பூமியே மிஞ்சும் இல்லையேல் விரைவில் எல்லா இடங்களும் பள்ளங்களாகி கடலாகிவிடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை