| ADDED : ஜன 06, 2024 09:48 PM
ஜனவரி 7, 1953ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளங்கோவில் எனும் ஊரில், கிருஷ்ணசாமி - அமராவதி தம்பதியின் மகனாக, 1953ல் இதே நாளில் பிறந்தவர் கே.பாக்யராஜ்.இவர், பள்ளியில் படித்தபோதே நாடகங்களை இயக்கினார். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்தார். 'சிவப்பு ரோஜாக்கள்' படத்திற்கு வசனம் எழுதினார். 'புதிய வார்ப்புகள்' படத்தில் கதாநாயகன் ஆனார்.'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தில் இயக்குனர் ஆனார். 'ஒரு கை ஓசை' படத்தில் தயாரிப்பாளரானார். 'மவுன கீதங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களை எழுதி, இயக்கி, நகைச்சுவையையும், சோகத்தையும் தன் நடிப்பால் பந்தி வைத்தார்.அமிதாப்பச்சன் நடிப்பில், 'ஆக்ரி ராஸ்தா' என்ற ஹிந்தி படத்தையும் இயக்கினார். 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் இசையமைப்பாளர் மற்றும் பாடகராக மாறினார். 'பாக்யா' வார இதழை நடத்தி, பத்திரிகை ஆசிரியர் ஆனார். எம்.ஜி.ஆர்., ரசிகரான இவர் அ.தி.மு.க.,வில் சில காலம் இருந்து, சொந்த கட்சி துவங்கி அரசியல்வாதியாகவும் மாறினார். பன்முக கலைஞர் பாக்யராஜின் 71வது பிறந்த தினம் இன்று!