| ADDED : ஜன 08, 2024 09:28 PM
ஜனவரி 9, 1979
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள செம்மங்குடியில், குப்புசாமி - வள்ளியம்மை தம்பதிக்கு மகனாக, 1896, அக்டோபர் 29ல் பிறந்தவர் கோதண்டபாணி.குடவாயில் அருகில் உள்ள விடையல்கருப்பூரில் பள்ளிக்கல்வி, திருச்சி புனித சூசையப்பர் கல்லுாரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னத்துார் நாராயணசாமி உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை படித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் துணை கலெக்டராகவும், இரண்டாம் உலகப்போர் குடியேற்ற மக்களின் காவலராகவும் பணியாற்றினார்.பிரிட்டிஷ் அரசின், 'ராவ் சாகேப்' பட்டம் பெற்ற இவர், சுதந்திரத்துக்கு பின், வெளிநாடு செல்வோருக்கான கட்டுப்பாட்டாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 'பண்டைய தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடு' என்ற தலைப்பில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் உரையாற்றினார். பல இலக்கிய ஆய்வு நுால்களை எழுதிய இவரது தமிழ் பணிக்காக, ராஜா சர் முத்தையா செட்டியார், 1,000 பொற்காசுகளை வழங்கினார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவர், 1979ல் தன், 83வது வயதில் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!