| ADDED : மார் 11, 2024 09:22 PM
மார்ச் 12, 1913 மஹாராஷ்டிரா மாநிலம், சத்தாரா மாவட்டம், தேவராஸ்திரே எனும் ஊரில் 1913ல் இதே நாளில் பிறந்தவர் யஷ்வந்த்ராவ் பல்வாந்த்ராவ் சவான் எனும் ஒய்.பி.சவான்.சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் விதாபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். மும்பை பல்கலையில் வரலாறு, அரசியல் படித்தார். ஒருங்கிணைந்த மும்பை மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றதுடன், மாகாண காங்கிரஸ் தலைவரானார். சுதந்திரத்துக்குப் பின், நேருவின் அமைச்சரவை யில் பாதுகாப்பு துறையை கவனித்தார். பின், காங்கிரஸ் பிரிவினையின்போது சரண்சிங் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சர், துணை பிரதமர் பொறுப்புகளை வகித்தார்.இந்திரா அமைச்சரவையில், நிதிக்குழு தலைவராகவும் இருந்தார். மும்பையின் முதல்வராகவும், மஹாராஷ்டிரா பிரிந்த பின் அதன் முதல்வராகவும் பொறுப்பேற்று, சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு சங்கங்கள், பல்கலைகளை உருவாக்கினார்.இவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போதுதான், பாகிஸ்தான் போரில் நம் நாடு வெற்றி பெற்றது. தன் 71வது வயதில், 1984, நவம்பர் 25ல் மறைந்தார். மூன்று பிரதமர்களின் அமைச்சரவையை அலங்கரித்த ஒய்.பி.சவான் பிறந்த தினம் இன்று!