சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கூவத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரிக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா கூவத்துாரில் உள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக பணிபுரிந்தவர் சின்னப்பன். 2009 ஜூன் 30ல் பணி ஓய்வு பெற்றார். இவர், தனக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களில் ஓய்வு கால பலன்களை வழங்கும்படி, 2022 பிப்ரவரியில் உத்தரவிட்டது. அதை அமல்படுத்தாததால், கூவத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வசதி சங்கத்தின் தலைவர் கலைச்செல்வன், சிறப்பு அதிகாரி கலையரசன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கை, சின்னப்பன் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு, பல முறை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. அது மட்டுமின்றி, விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, இருமுறை உத்தரவிடப்பட்டது. ஒரு முறை, 'வாரன்ட்' பிறப்பித்தும் உத்தரவிடப்பட்டது. மனுதாரருக்கு, 16.48 லட்சம் ரூபாய் வழங்க வேண்டிய நிலையில், 6 லட்சத்து 80,470 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இது, நீதிமன்ற அவமதிப்பு என்பதால், ஏன் தண்டனை விதிக்கக்கூடாது என விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நிலையில், அதற்கு விளக்கம் அளிக்காமலும், உத்தரவை அமல்படுத்தாமலும் இருந்துள்ளனர். எனவே, கூவத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரி பி.கலையரசனுக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. விசாரணை டிச., 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.