பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அறிக்கை அளிக்க உத்தரவு
தேனி: மாநில அளவில் பதட்டமான, பிரச்னைக்கு உரிய ஓட்டுச்சாவடிகளை போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. விரைவில் சிறப்பு திருத்த முகாம்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பதட்டமான, பிரச்னை ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் பற்றிய விபரங்களை தொகுதிவாரியாக கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில் 'தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பணம், ஜாதி அடிப்படையில் ஓட்டுச்சாவடிகள் கைப்பற்றுதல், வாக்காளர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும் ஓட்டுச்சாவடிகள், அதில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்க உள்ளோம்' என்றனர்.