மாவட்ட நிர்வாகங்களும், அமைச்சர்களும் செயலற்று கிடப்பதாக பழனிசாமி புகார்
சென்னை : 'மழையால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகங்களும், மாவட்ட அமைச்சர்களும் செயல்பாடற்று கிடப்பது கண்கூடாகத் தெரிகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், தி.மு.க., அரசு செயலிழந்து நிற்கிறது.சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில், இந்த அரசின் முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.கடந்த ஓரிரு நாட்களாக, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியும், மண் சரிவு ஏற்பட்டும், பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளன. மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பது தெரிகிறது. பல மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகங்களும், அமைச்சர்களும் செயல்பாடற்றுக் கிடப்பது கண்கூடாகத் தெரிகிறது.சென்னை மாநகர மக்கள், ஸ்டாலினின் தி.மு.க., அரசை நம்பாமல், தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்துகின்றனர். உதயநிதியை முன்னிலைப்படுத்த, மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது.தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் வாயிலாக, புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டு விட்டு, பாதிப்படைந்துள்ள மக்களை காக்கும் பணியில், கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும்.சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.