உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொன்னதையே சொல்கிறார் பழனிசாமி: ஸ்டாலின் கிண்டல் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

சொன்னதையே சொல்கிறார் பழனிசாமி: ஸ்டாலின் கிண்டல் முதல்வர் ஸ்டாலின் கிண்டல்

சென்னை:“யாருக்கும் சொல்லாமல், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டதால் சென்னை மூழ்கியது. ஆனால், வாழைப்பழ கதை மாதிரி பழனிசாமி சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்,” என, முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - தங்கமணி: 'பெஞ்சல்' புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாத்தனுார் அணை திறப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக சொல்லி இருந்தால், பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.திருவண்ணாமலை நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இறந்துள்ளனர். குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் தருகிறீர்கள். நிவாரணம் வழங்குவதில் என்ன அளவுகோல் வைத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை.அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 29,000 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது. கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சென்னையில் பாதிப்பு ஏற்பட்டது.அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீரை வெளியேற்றுவது குறித்து, ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வினாடிக்கு, 1.60 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்ததால் ஆபத்து ஏற்படுவதை தடுக்க அணை திறக்கப்பட்டது.அமைச்சர் பொன்முடி: வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால், 2,000 ரூபாய், கூரை வீடுகள் சேதம் அடைந்திருந்தால், 10,000 ரூபாய், முழுமையாக சேதம் அடைந்து இருந்தால் புதிய வீடு கட்டி தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நிவாரணம் தொடர்பாக கணக்கெடுப்பு நடக்கிறது.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு, 29,000 கன அடி நீரை மட்டுமே, அதிகப்படியாக திறக்க முடியும். சாத்தனுார் அணையில் அதிகாலை, 2:45 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, 3:00 மணிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.அதிகாலை நேரத்தில் தண்ணீர் திறந்ததால், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே, 100 ஏரிகள் உள்ளன. அதில் இருந்து வெளியேறிய அதிகப்படியாக வெள்ளநீரால், அடையாறு ஆற்றில் பாதிப்பு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு ஏற்படவில்லை.முதல்வர் ஸ்டாலின்: செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்ட காரணத்தால் பாதிப்பு அல்ல; சொல்லாமல் திறந்து விட்ட காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை மூழ்கியது.பழனிசாமி: அடையாறு ஆற்றில் வினாடிக்கு, 1 லட்சம் கனஅடி நீர் தங்கு தடையில்லாமல் செல்லும்; செம்பரம்பாக்கம் ஏரியில், 29,000 கன அடி நீரை மட்டுமே திறக்க முடியும்.முதல்வர்: ஏரியை திறக்க யாரிடம் அனுமதி வாங்குவது என்பதில் பிரச்னை; அனுமதி வாங்க முடியாத காரணத்தால், வேறு வழியில்லாமல் அதிகாரிகள் அதிகளவில் திறந்து விட்டுள்ளனர். யாருக்கும் சொல்லாமல் ஏரியில் நீர் திறக்கப்பட்டது. வாழைப்பழ கதை மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்.பழனிசாமி: அடையாறு ஆற்றில், 1 லட்சம் கன அடி நீர் தாராளமாக செல்லும். அப்போது, இரண்டு மணி நேரத்தில் 50 செ.மீ., மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் பின்பகுதியில் உள்ள, 100 ஏரிகள் நிரம்பி வெள்ள நீர் அடையாறு ஆற்றில் சென்றது.அமைச்சர் சுப்பிரமணியன்: அடையாறு ஆற்றில், 20,000 கன அடி நீர் சென்றாலே கரையில் உள்ள பல பகுதிகள் பாதிக்கப்படும். 1 லட்சம் கன அடி அடையாறு ஆற்றில் போகாது. வேண்டுமானால், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்யலாம். 1 லட்சம் கன அடி நீர் செல்வதாக கூறுவது தவறான தகவல். மனித தவறால் தான் அடையாறு ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.பழனிசாமி: எந்த ஆதாரத்தில், 20,000 கன அடி நீர்தான் செல்லும் என கூறுகிறார் என்று தெரியவில்லை.அமைச்சர் சுப்பிரமணியன்: நான், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள சிட்கோ குடியிருப்பில் இருப்பவன். பல ஆண்டுகளாக மழை பாதிப்புகள் எனக்கு நன்றாக தெரியும்.பழனிசாமி: பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மெய்யென நிரூபிக்க முடியாது.அமைச்சர் அன்பரசன்: செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி எங்களுக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், அதற்கு கீழே இருப்பவர்கள் நாங்கள்தான். இந்த ஏரிக்கு கீழே ஒரு ஏரி கூட கிடையாது; 100 ஏரி இருக்கிறது என்று பழனிசாமி சொல்கிறார். பார்த்தால் தான் அவருக்கு தெரியும். ஆதனுாரில் இருந்து தான் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வருகிறது.முதல்வர்: யாருக்கும் சொல்லாமல் ஏரியில் நீர் திறக்கப்பட்டது. சட்டசபையில் தாக்கல் செய்த மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில், மனித தவறுதான் இதற்கு காரணம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைவிட வேறு பதில் வேண்டுமா?அமைச்சர் துரைமுருகன்: அடையாறு ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் போகுமா; 2 லட்சம் தண்ணீர் போகுமா என்பதை, பின்னர் ஆராய்ந்து பார்க்கலாம். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இத்துடன் இப்பிரச்னையை முடித்து கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ