உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் வெத்துவேட்டு அறிவிப்புகள் பன்னீர்செல்வம் கண்டனம்

அரசின் வெத்துவேட்டு அறிவிப்புகள் பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை:சத்துணவு மையங்களில், கட்டமைப்பு வசதிகளை, அரசு மேம்படுத்தாததற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., அரசு வெளியிடும் அறிவிப்புகள், வெத்துவேட்டு அறிவிப்புகளாக இருக்கின்றன. செயல்படுத்தக்கூடிய அறிவிப்புகளாக இல்லை. கடந்த ஆண்டுக்கான சமூக நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில், சத்துணவு திட்டத்தின் கீழ், 'சமையலறை சாதனங்கள் வழங்கல்' என்ற தலைப்பின் கீழ், சத்துணவு மையங்களுக்கு, 25.41 கோடி ரூபாய் செலவில், புதிய சமையல் உபகரணங்கள், 2022 - 23ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், சத்துணவு மையங்களில், சமையல் உபகரணங்கள், எரிவாயு இணைப்புடன் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2,100 சத்துணவு மையங்களுக்கு, வைப்பறையுடன் கூடிய சமையல் அறை படிப்படியாக கட்ட, 173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வளவு நிதி ஒதுக்கியும், ஏப்., 18ல் விருத்தாசலம் அடுத்த செம்பனக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஏப்., 9ல் கடலுார் சத்துணவு மையத்திலும், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், காஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டுள்ள, ரெகுலேட்டர், காஸ் டியூப் போன்றவை பழுதடைந்திருப்பதே. காஸ் அடுப்பை கூட, புதுப்பிக்க முடியாத திறனற்ற அரசாக, தி.மு.க., அரசு உள்ளது.ஒதுக்கப்பட்ட நிதி எங்கு போய் சேருகிறதோ என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அரசின் மெத்தனப் போக்கால், சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. சத்துணவு மையங்களில் பணியாற்றுவோர், மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்திட, பழுதடைந்த காஸ் அடுப்பு மற்றும் உபகரணங்களுக்கு பதிலாக, புதிய காஸ் அடுப்பு மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி