அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: பழனிசாமியிடம் இருந்த ஆட்சியை பிடுங்கி, தி.மு.க., திருந்தியிருக்கும் என நினைத்து, மக்கள் அவர்கள் கையில் கொடுத்தனர். ஆனால், அவர்கள் தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இதற்கு மாற்றாக, அ.ம.மு.க., இருக்கும் என, மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில், அ.ம.மு.க., உறுதியாக இடம் பெறும்.'எப்படியும், பா.ஜ., அணியில இடம் பிடிச்சிடுவோம்'னு சொல்லாம சொல்றாரோ?ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து, கிறிஸ்துவ தேவாலய தலைவர்கள், இஸ்லாமிய மதபோதகர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, பல நலத்திட்டங்களை வெளியிட்டுள்ளார். மதச்சார்பற்ற அரசியல் செய்வதாக கூறும் முதல்வர், ஹிந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி இருப்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சிறுபான்மை யினர் ஓட்டுகளை யார் வாங்குற துன்னு தானே போட்டியே நடக்குது!விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலர் சந்திரசேகரன் பேட்டி: சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்யும் தி.மு.க., அரசு, ஹிந்துக்களின் பண்பாடு, கலாசாரத்தின் மீது கை வைத்து வருகிறது. பழனி கோவிலில், பல ஆண்டுகளாக இசைக்கப்பட்டு வந்த இசை வாத்தியங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்யும் அளவிற்கு அஜாக்கிரதையாக அரசு செயல்பட்டு வருகிறது.ஹிந்து கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் ஆட்சியில, வேறென்ன எதிர்பார்க்க முடியும்?-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், 2024ல் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, அரசு பள்ளிகளுக்கு, 1966 புதிய ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலியிடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். இதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது.இப்போதைக்கு தமிழக அரசின் எல்லா நடவடிக்கைகளுக்குமே தடையாக இருக்கும் ஒரே விஷயம், நிதி மட்டும் தானே!