UPDATED : பிப் 10, 2024 01:16 AM | ADDED : பிப் 10, 2024 12:04 AM
சென்னை:'பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு இரு வகையான வினாத்தாள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில், தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு தேர்வு அறையிலும், இரு வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும்.ஒரு தேர்வு மையத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஒரே வகை வினாத்தாள் வழங்குவதற்கு பதில், அருகருகே அமர்ந்திருக்கும், ஒவ்வொருவருக்கும் வினாத்தாள் வகை மாற்றி, மாற்றி வழங்கப்படும்.வினாத்தாள் முன்கூட்டியே கசியாமல் தேர்வு பணியில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களும், மாணவர்களும் மொபைல் போன் எடுத்து செல்லக்கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.