உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊடு பயிர் சாகுபடியை நாடு முழுதும் விரிவுபடுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஊடு பயிர் சாகுபடியை நாடு முழுதும் விரிவுபடுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

கோவை: '' விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி முறைக்கு மாற வேண்டும் எனவும், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்,'' எனவும் பிரதமர் மோடி கூறினார்.கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:விவசாயிகள் பேசியதை உணர முடிந்தது. புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகள் துண்டை காட்டியதை பார்க்கும் போது, பீஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது.

நாட்டிற்கு பங்களிப்பு

கோவையில் மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனை நான் தலைவணங்குகிறேன். கலாசாரம், கனிவு ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கி கொண்ட மண் கோவை. தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை திகழ்கிறது. ஜவுளித்துறையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்கிறது.தமிழகத்தின் விவசாயிகளின் துணிச்சலை பாராட்டுகிறேன். இங்கே எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டிற்கு வழிகாட்டுகிறார்.

கிராம பொருளாதாரம்

இயற்கை விவசாயம் சிறப்பானது. எனது மனதுக்கு நெருக்கமானது. இந்த மாநாட்டிற்கு வராமல்போயிருந்தால் நான் பல விஷயங்களை கற்காமல் போயிருப்பேன். இயற்கை விவசாயத்தின் மையமாக இந்தியா மாறுகிறது. நமது இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமாக்கி வருகின்றனர். இதனால், கிராம பொருளாதாரம் மேம்படும்.இந்திய விவசாயத்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாய ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழும். உலக அரங்கில் முக்கிய இடம்பெறும். இயற்கை வேளாண்மை இந்த நூற்றாண்டின் தேவை.

விவசாயிகளுக்கு பலன்

விவசாயிகள் கடன் அட்டை மூலம் இந்தாண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. 9 கோடி விவசாயிகளுக்கு 21வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் நிதியுதவி திட்டத்தால் பலனடைந்த விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் அதிகளவு பயன்படுத்துவதன் காரணமாக மண்ணின் வளத்தை பாதித்துள்ளது.விவசாய செலவினமும் அதிகரிக்கிறது. இதற்கான தீர்வு இயற்கை வேளாண் மட்டுமே. இயற்கை விவசாயம் இந்த நூற்றாண்டின் தேவை. மண்ணின் வளத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

நமது பாரம்பரியம்

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஒரே தீர்வு. அரசின் திட்டங்களினால் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்தனர். இதனால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான மாற்றத்தை தென் மாநிலங்களில் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடக்கிறதுஇயற்கை விவசாயம் என்பது நமது சுதேசியின் ஒரு பகுதி. இதனை எங்கிருந்தும் பெறவில்லை. இறக்குமதி செய்யவில்லை. நமது பாரம்பரியத்தை சேர்ந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பஞ்சகாவ்யம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்கின்றனர்.

நாடு முழுதும்

இயற்கை விவசாயத்துடன் சிறுதானியம் பயிர் செய்ய வேண்டும். இது பூமியின் வளத்துக்கு ஊக்கம் அளிக்கிறது. தமிழகத்தின் உணவு பண்பாட்டில் சிறுதானியங்கள் எப்போதும் உண்டு. தமிழகத்தில் முருகனுக்கு தேனையும், திணையையும் படைக்கிறோம் தமிழகத்தில் கம்பு, சாமை போன்ற உணவு பொருட்கள் பல தலைமுறையாக உள்ளன.விவசாயத்தில் வாழும் பல்கலையாக தென் மாநிலங்கள் திகழ்கின்றன.கேரளா மலை பகுதிகளில் பல அடுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை பாக்கு மரம் இடையே ஊடுபயிராக மிளகு உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. ஒரு பயிர் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் மாற வேண்டும். ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடி முறையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

தன்னிறைவு

இந்த உணவு பொருட்கள் உலக சந்தையை அடைய வேண்டும். இதற்கு இயற்கை விவசாயத்துக்கு முக்கிய பங்கு உண்டு. விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். உலகத்தின் மிக பழமையான இன்றும் செயல்படும் அணைகள் தமிழகத்தில் உள்ளன.இயற்கை விவசாயத்துறையில் இந்தியா முன்னேறி ஆக வேண்டும். வேளாண் பாட திட்டத்தில் இயற்கை விவசாயம் கொண்டு வர வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பருவத்தில் இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவக்குங்கள். இயற்கை வேளாண்மை சந்தையை வளப்படுத்த வேண்டும். விவசாயிகளின் தன்னிறைவுக்கு அரசின் ஆதரவு முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சிறுமிகளின் பதாகையை கேட்ட பிரதமர்

மாநாட்டில் இரண்டு சிறுமிகள் பதகைகள் ஏந்தி நின்றனர். அதில் ' நான் பட்டம் பெறும்போது இந்தியா 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும்' எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கவனித்த பிரதமர் மோடி, அந்த பதாகையை உன்னிப்பாக கவனித்ததாகவும், அதனை வாங்கி வரும்படி பாதுகாப்பு படையினரிடம் கூறினார்.

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி

கோவையில் இன்று நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாடு முழுதும் உள்ள ஒன்பது கோடி விவசாயிகள் வங்கி கணக்குகளில், 18,000 கோடி ரூபாய் நிதியை விடுவித்தார். கோவை வந்த மோடி, கொடிசியா அரங்கில், தென் மாநில இயற்கை வேளாண் மாநாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளையும் பிரதமர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், நாட்டில் உள்ள ஒன்பது கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில், வங்கி கணக்குகளில், பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ், 18,000 கோடி ரூபாயை விடுவித்தார். இம்மாநாட்டில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த, 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.பல்வேறு சாதனை படைத்த கேத்தனூர் பழனிசாமி, தங்கவேலு, அமீர் ராஜ் உள்ளிட்ட 10 விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை