| ADDED : ஆக 26, 2025 12:49 PM
சென்னை; பொய், பொய், வாயைத் திறந்தால் பொய்யை தவிர வேறு எதுவும் திமுக சொல்வது கிடையாது என்று கூறிய பாமக தலைவர் அன்புமணி விடியல் எங்கே என்ற ஆவணத்தை வெளியிட்டு குற்றம்சாட்டி உள்ளார்.தி.மு.க வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த 'விடியல் எங்கே' எனும் ஆவணத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது; இந்த ஆவணத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிகள் அனைத்து பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளில் பொய் கிடையாது. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் அவர்கள் சொன்னதை தான் வெளியிட்டு இருக்கிறோம்.தமிழகத்தில் எங்கேயும் விடியல் இல்லை என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்துள்ளோம். தமிழகம் இன்று இருண்டு கிடக்கிறது. விடியல் எங்கேயும் இல்லை, அதை இந்த ஆவணம் மூலம் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். மற்ற கட்சிகள் எல்லாம் திமுக பொய் வாக்குறுதிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் நாங்கள் இதை புத்தகம் வடிவில் வெளியிட்டுள்ளோம். ஒரு பொய்யைக் கூட நாங்கள் சொல்லவில்லை. பொய்யை சொன்னது திமுக தான் என்று இந்த ஆவணங்கள் மூலம் நிரூபித்து இருக்கிறோம். இதை தமிழக மக்கள் படிக்க வேண்டும்.திமுக மக்களுக்கு கொடுத்தது எல்லாம் ஏமாற்றும்தான். பொய், ஏமாற்றம், பித்தலாட்டம், ஊழல்,நிர்வாக சீர்கேடுகள். பொய், பொய்.. வாயைத் திறந்தால் பொய்யை தவிர வேறு எதுவும் கிடையாது. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது 505 வாக்குறுதிகள், அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் 66. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் 66. 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.ஆனால் கோயபல்ஸ் பிரசாரம் போன்று 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறி வருகிறது. தமிழக மக்கள் அவ்வளவு ஏமாளிகளா? 505ல் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அவர்கள் நிறைவேற்றியது சதவீத அடிப்படையில் பார்த்தால் 12.94 சதவீதம் தான். மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சியில் அளித்த 12 வாக்குறுதிகளில் 8 நிறைவேற்றப்படவில்லை. மாநில சுயாட்சி தமிழ் என்ற ஒன்றும் மட்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 3வாக்குறுதிகள் அரைகுறை. இந்தியாவில் பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது தேவையே கிடையாது. 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின் எத்தனை ஆயிரம் முதலீடு கொண்டு வந்துள்ளார்? நீட் தேர்வு ரத்து என்று முதல்வரும், துணை முதல்வரும் தெருத்தெருவாக சொன்னார்கள். ஒரு வாரத்தில் ரத்து என்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஒரேயொரு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. இவ்வாறு அன்புமணி பேசினார்.