1,299 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்கிறது காவல் துறை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:காவல் துறையில், 1,299 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தாலுகா மற்றும் ஆயுதப்படை பிரிவுக்கு, 1,299 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படுவதாக, வாரியம் அறிவித்துள்ளது.தாலுகா பிரிவுக்கு, 654 பெண்கள், 279 ஆண்கள் என, 933 பேரும், ஆயுதப்படை பிரிவுக்கு, 255 ஆண்கள், 111 பெண்கள் என, 366 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு, www.tnusrb.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும், 7ல் இருந்து, மே 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.காவல் துறையில் பணிபுரிவோருக்கு, தாலுகா மற்றும் ஆயுதப்படை பிரிவில் தலா, 20 சதவீதம் ஒதுக்கீடு, காவல் துறையினரின் வாரிசுகளுக்கு, 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, விளையாட்டு வீரர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; 20 - 30 வயதுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது உச்சவரம்பு, அவர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், வகுப்புவாரி மற்றும் பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும்.புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, 36,900 - 1,16,600 ரூபாயாக சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.'பொது மற்றும் துறை ரீதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு, தனித்தனியாக எழுத்து தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, வாரியம் நேற்று அறிவித்துள்ளது.